வரட்சியினால் கம்பஹா மாவட்டத்தில் 207, 991 பேர் பாதிப்படைந்துள்ளனர்கடும் வரட்சி யினால் நாட்டிலுள்ள 12 மாவட்டங்களில் 245, 283 குடும்பங்களைச் சேர்ந்த 905, 200 பேர், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இம் மாவட்டத்தில் மாத்திரம் வரட்சியினால் இதுவரை 48,124 குடும்பங்களைச் சேர்ந்த 207,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொடை, மீரிகம, திவுலப்பிட்டிய, கம்பஹா, கிரிந்திவெல, வெலிவேரிய, அத்தனகல்ல ஆகிய பிரதேசங்களிலேயே ஆகக் கூடுதலானோர் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இப் பிரதேசங்களிலுள்ள கிணறுகள், ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் என்பன, நீர் இன்றி வற்றிப்போயுள்ள நிலையில், இப் பிரதேசங்களில் வாழும் மக்கள் குடிநீர்ப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் 24 மணி நேரமும் இயங்கும் 117 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடுமையான வரட்சி மற்றும் குடி நீர்ப் பிரச்சினை ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள், இத் தொலைபேசி இலக்கத்துடன் எந்நேரமும் தொடர்புகொண்டு, தமது பிரச்சினைகளைத் தெரிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஐ. ஏ. காதிர் கான்