கடந்த அரசாங்கத்தை விமர்சிப்பது தவாறானதாகும்





எம்.ஜே. எம். சஜீத்

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஐம்பதனாயிரம் பட்டதாரி நியமனங்களை தவாறு என விமர்சனம் செய்வது தவறான விடயமாகும் என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு இன்று (25) பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்ன தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர். துரைரட்ணம் சமர்ப்பித்த அவசரப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழககு மாகாணத்தைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை இன்று பாரியதொரு சமூகப்பிரச்சினையாக மாரியுள்ளதுடன், எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெறும் நிலையில் பாரிய தாக்கம் ஏற்படக்கூடிய நிலமை உருவாகியுள்ளது.

எனவே இந்தவிடயத்தில் நாம் எல்லோரும் ஒன்றினைந்து வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் உரையாற்றிய போது கடந்த அரசாங்கத்தில் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட ஐம்பதனாயிரம் நியமனங்கள் வழங்கப்பட்டதனால் தான் இன்று பட்டதாரிகள் எல்லோரும் அரச நியமனங்கள் வேண்டும் என போராட்டம் நடாத்தும் நிலைமை உருவாகியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தினால் ஐம்பதனாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதனால் தான் இன்று வேலையற்ற பட்டதாரிகளின் தொகை குறைவடைந்துள்ளது. எனவே தொடர்ச்சியான அழுத்தங்களை மத்திய அரசாங்கத்திற்கு கொடுப்பதுடன் மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியும்.

கடந்த அரசாங்கத்தில் ஆளும் கட்சியில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் பெற்று மத்திய மற்றும் மாகாணத்திலும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொண்டிருந்த வேலையில்  தான் ஐம்பதனாயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. தற்போது எதுவும் தெரியாதவர்களைப் போன்று கடந்த அரசினால் வழங்கப்பட்ட ஐம்பதனாயிரம் பட்டதாரிகள் நியமனங்கள் தொடர்பாக பேசுகின்றனர். 

கடந்த அரசாங்கத்தினால் அவ்வாறு நியமனங்களை வழங்காவிட்டிருந்தால் தற்போதுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் தொகை பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டிருக்கும். கடந்த அரசைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும்தான் உரிமை உள்ளது. அவர்கள் கொள்கையுடன் அரசியல் செய்தவர்கள் முஸ்லிம் காங்கிரசினர் எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் அதில் அங்கம் பெற்றவர்கள் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் இறுதிக்காலத்தில் இருந்துகொண்டிருக்கும் நாம் கிழக்கு மாகாண மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி சபையில் உரையாற்றும் போது யதார்த்த பூர்வமான கருத்துக்களை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை அமுல்படுத்த முடியாமல் உள்ளதாகவும், கிழக்கு மாகாண சபை கூட்டங்களுக்கு வந்து போவது மாத்திரம் தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என கிழக்கு மாகாண அமைச்சரவையில் அங்கம் பெரும் அமைச்சர் ஆரியவதி கலபெதி சபையில் தெரிவித்த கருத்துக்கள் ஊடாக கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளின் யதார்த்தமான நிலைப்பாடு தெரிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.