வில்பத்து பிரச்சினைக்குரிய நிரந்தர தீர்வினை அமைச்சர் ரிசாத் ஏன் குழப்ப முற்படவேண்டும்

முசலி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினைக்காணும் பொருட்டு ஜனாதிபதியின் செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க முசலி பிரதேச சபையில் 27.04.2017 இல் நடைபெற்ற அதிகாரிகளுடனான உண்மையினை கண்டறியும் கலந்துரையாடலில் அப்பிரச்சினைகள் பற்றி எதுவும் தெரியாதவர்களை அனுப்பி அதனை குழப்பியடிக்க அமைச்சர் ரிசாத் முற்பட்டது ஏன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009, 2012 இல் முசலி பிரதேசத்தின் வில்பத்துவை அண்மித்த பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் அரச மற்றும் தனியார் நிலங்கள் வனபரிபாலன திணைக்களத்துக்கு சொந்தமானதென்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அமைச்சர் ரிசாத் அவர்கள் நினைத்திருந்தால் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தில் அவருக்கு இருந்த அதிகாரத்துக்கு அதனை தடுத்திருக்கலாம். அல்லது வர்த்தமானியை ரத்துசெய்ய வைத்திருக்கலாம். 

அதுமட்டுமல்லாது மாவில்லு பாதுகாக்கப்பட்ட வன பிரதேசம் உட்பட இன்னும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வனபரிபாலன சபையுடன் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக மீண்டும் 2௦17 ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தல் ரஷ்யாவில் வைத்து அவசரமாக பிரகடனம் செய்யப்பட்டது.  

இந்த பிரகடனம் வெளியிடுவதற்கு முன்பாக, இதற்கு போதுமான ஆவணங்களை தயாரிக்குமாறு சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனா அவர்கள் கடந்த வருடம் உத்தரவு வழங்கியிருந்தார். இது இரகசியமான விடயமுமல்ல.
இந்த பிரச்சினை ஆரம்பமானதிலிருந்து இன்று வரைக்கும் எத்தனையோ தடவைகள் அமைச்சர் ரிசாத் அவர்கள் அமைச்சரவை கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றார். ஆனால் ஒரு தடவையாவது குறித்த பிரச்சினை உள்ள பிரதேசத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் இது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் ஏன் பேசவில்லை? 

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை நோக்கி செல்லாமல், அதனை சாட்டாக வைத்துக்கொண்டு தனது சுயநல அரசியல் தேவைக்காக பயன்படுத்தும் விதமாக அவ்வப்போது தேர்தல்கள் நெருங்குகின்ற நேரங்களில், தான் வில்பத்துவினை மீட்க போராடுவதாக மக்களுக்கு காண்பித்துக்கொண்டு அரசியல் செய்து வருகின்றார். 

உண்மையில் இந்த பிரச்சினையை தீர்ப்பது என்றால் ஜனாதிபதியிடமும், அதன் செயலக உயர் அதிகாரிகளிடமும் பேசி இந்த வர்த்தமானியை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இராஜதந்திர முயற்சியை கையாளாமல், வீராப்பு பேசிக்கொண்டு இந்த பிரச்சினையை தீர்த்துவைப்பதற்காக நான்தான் தனியாளாக நின்று போராடுவதாக கூறிக்கூறியே காலத்தை கடத்தி மக்களை ஏமாற்றியுள்ளார்.  

இதன் காரணமாக தூங்கிக்கிடக்கின்ற சிங்கள இனவாதிகளை தட்டி எழுப்பி பிரச்சனைகளை பெரிது படுத்துகின்ற காரியங்களிலேயே அமைச்சர் கவனம் செலுத்தியதுடன் தன்னை முஸ்லிம் மக்களின் ஒரு கதாநாயகனாக காண்பிப்பதிலேயே அமைச்சரின் நடவடிக்கை இருந்தது. 

இதன் உண்மை நிலவரம் என்ன என்று தெரிந்ததனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதில் சற்று நிதானப்போக்கினை கையாண்டது. இதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் தலையின் மேல் போட்டுவிட்டு அரசியல் காய்நகர்த்தல் ஒன்று செய்வதற்கு அமைச்சர் ரிசாத் முயற்சித்தமையே இதற்கு காரணமாகும்.    

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் பொருட்டு, பல மாதங்களுக்கு முன்பு நிபுணத்துவ குழுவினரை கள ஆய்வுக்கு அனுப்பி, அதன் பின்பு ஆதாரபூர்வமான ஆவணங்கள் சகிதம் கடந்த ௦3.௦4.2௦17 இல் ஜனாதிபதியின் செயலாளருடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உயர்மட்ட பேச்சுவார்த்தை நடாத்தியது. 

இதன் பிரகாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் முசலி பிரதேச சபையில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளுமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரினால் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அழைக்கப்பட்டார். 

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்று இதயசுத்தியுடன் செயல்பட்டிருந்தால் பிரச்சினைக்குரிய மாவட்டத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் ரிசாத் கட்டாயம் கலந்துகொண்டிருக்க வேண்டும். அல்லது பிரச்சினை பற்றி அறிந்தவர்களையாவது அமைச்சரின் பிரதிநிதியாக அனுப்பியிருக்க வேண்டும். 

ஆனால் மன்னார் மாவட்டத்துக்கு வெளியிலிருந்து நபவி, வீ.சி. இஸ்மாயில், சுபைதீன், இல்லியாஸ், ஜமீல், ஆசாத்சாலியின் சகோதரர் ரியாஸ்சாலி, போன்றவர்களை சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு குழப்பம் விளைவிப்பதற்காகவே அமைச்சரினால் அனுப்பப்பட்டிருந்தார்கள்.   

இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் எவருக்கும் முசலி பற்றிய எந்தவித அடிப்படை அறிவுமில்லை. அத்துடன் முசலி பிரச்சினை பற்றிய அனுபவமோ, அல்லது கடந்த காலத்தில் இப்பிரச்சினை பற்றிய எந்தவித கலந்துரையாடல்களிலோ கலந்து கொண்டவர்களுமல்ல. இப்படிப்பட்டவர்களை இந்த கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு எவ்வாறான விளக்கங்களை இவர்களால் வழங்க முடியும் என்பதுதான் எனது கேள்வியாகும்.  

இறுதியாக பிரச்சினைக்குரிய வனப்பிரதேசத்துக்கு பார்வையிட செல்ல முற்ப்பட்டபோது, அங்கு சென்றால் நாங்கள் வாகனங்களை தாக்குவோம் என்று அச்சுறுத்தல் செய்யப்பட்டது. இதன் காரணமாக பொலீசார் பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டார்கள். இறுதியில் வவுனியா மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி வரவழைக்கப்பட்டு அதன் பின்பு உரிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டோம். 

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடாது என்பதிலேயே அமைச்சர் ரிசாத் பதியுதீன் மிகவும் அவதானமாக இருக்கின்றார்.   என்று தனதுரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகம்மத் இக்பால்