இறக்காமம் மாணிக்கமடு விவகாரத்தை மதச்சாயம் கொண்டு மறைக்க வேண்டாம்





இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மதமாக பௌத்தம் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக சிங்களம் இருப்பதை நாங்கள் மறுக்கவில்லை. இந்த நாட்டை ஆழுகின்ற பெரும்பான்மை பலத்தை நீங்கள் கொண்டிருப்பதையும் நாங்கள் மறுக்கவில்லை. இப்படி உங்களது மத, மொழி, அரசியல் அடையாளங்களை உளப்பூர்வமாக நாங்கள் ஏற்றுக்கொள்கின்ற நிலையில், எங்களைப் பற்றிய உங்கள் பார்வையும் அனுகுமுறையும் ஏன் இன்னும் குறுகிச் செல்கின்றது என்பதை,பௌத்த மதத்தை மற்ற இனங்களை ஒடுக்கும் கருவியாகப் பயன்படுத்த எத்தனிக்கும் கடும்போக்குவாதிகள் கூற வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலைவாய்ப்புச் செயலாளருமான ஏ.எல். தவம் கூறினார்.



கிழக்கு மாகாண சபையில் இன்று (25) கொண்டு வரப்பட்ட, இறக்காம மணிக்கமடு மாயக்கல் மலையில் விகாரை அமைப்பது தொடர்பான அவசரப் பிரேரனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பின்பற்றப்படும் மதமாக பௌத்தம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்று, இந்துத்துவத்தையும், இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும் பின்பற்றும் மக்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?
இந்த நாட்டில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாக சிங்களம் இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்று, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இனங்களும் இந்த நாட்டில் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?
இந்த நாட்டை ஆழுகின்ற பெரும்பான்மைப் பலத்தை நீங்கள் கொண்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதைப் போன்று, தற்போதைய இலங்கையின் சிக்கல் வாய்ந்த அரசியல் பின்னத்தில் சிறுபான்மை மக்களை புறந்தள்ளி அதிகாரத்திற்கு வர முடியாது என்பதை நீங்கள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள்?
இப்படி, நான் குறிப்பிட்டுக் காட்டியுள்ள விடயங்கள், இலங்கை பல்லின சமூகங்கள் வாழுகின்ற ஒரு நாடு என்பதற்குப் போதிய சான்றுகளாக அமைகின்றன. அதனால், உங்களுக்கு இந்த நாட்டில் என்ன மத, மொழி, அரசியல் உரிமைகள் இருக்கிறதோ, அதே உரிமை மற்ற சமூகங்கள் அல்லது இனங்களுக்கும் இருக்கிறது என்பதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள்?அவர்களிடம் உங்கள் விடயங்களை ஏன் திணிக்கின்றீர்கள்?
முஸ்லிம்களின் பிரதேசத்தில் பௌத்த சின்னங்களையும் கட்டிடங்களையும் உருவாக்கி, தமிழர்கள் கடந்தகாலத்தில் மாற்று வழியின்றித் திணிக்கப்பட்ட ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதைப் போன்று முஸ்லிம்களையும் தள்ள நினைக்கின்றீர்களா? இந்த நாடு கடந்தகால இன மோதல்களால் இழந்து நிற்கும் இழப்புக்களை நீங்கள் அறீவீர்களா? சர்வதேச பொறிக்குள் இந்த நாடு அகப்பட்டு மூச்சுத்திணறுவதை நீங்கள் அறிவீர்களா? நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் விழுந்துள்ளதை நீங்கள் உணருவீர்களா?

இறக்காமம் மாயக்கல் மலையடிவாரத்தில் ஒரு பௌத்தர் கூட வசிக்காத நிலையில்; தமிழ்பேசும் சமூகங்கள் வாழுகின்ற இடத்தில்; குறிப்பாக முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பாரம்பரிய இடத்தில், விகாரையை அமைக்க முனைவது எந்த வகையில் நியாயம் என வினவ விரும்புகிறேன். பலாத்காரமாக மாற்றுக் காணியினைக் கொடுத்துவிட்டு, குறிப்பிட்ட காணியை சுவிகரித்து சட்டவிரோதக் கட்டிடத்தைக் கட்ட வேண்டிய தேவை என்ன இருக்கிறது?
இப்படி எத்தனையோ நாடுகளை என்னால் உதாரணமாகக் கூற முடியும். அந்நாடுகளில் இப்படி இருக்கின்ற போது, இலங்கையில் ஏன் இன்னொரு சமூகத்தின் மீது வெவ்வேறு வடிவிலான மத ரீதியிலான வன்முறைகளைத் திணிக்க முனைகிறீர்கள்? இலங்கை உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல; எங்களுக்கும் செந்தமானது. நாங்கள் வந்தேறு குடி என்றால்; நீங்களும் வந்தேறு குடிதான். காலம் கூடிக் குறைந்தாலும் நீங்களும் வந்தேறு குடிதான். எனவே, இறக்காமத்தில் இடம்பெறும் சட்டமுரணான பலாத்கார பௌத்த திணிப்பும், விகாரை நிர்மானமும் உடன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய எதிரியாகச் சித்தரிக்கப்படும் கிறிஸ்தவ நாடான அமெரிக்காவில், அந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இருக்கின்ற சுதந்திரம் அபாரமானது. முஸ்லிம்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படும் இந்துத்துவ ஆட்சி நடக்கும் இந்தியாவில், எவ்வளவு மத சுதந்திரத்தை அரசியல் சாசனரீதியில் முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள் என்று பாருங்கள். முஸ்லிம் நாடான மலேசியாவில் முஸ்லிம்களல்லாதவர்கள் அனுபவிக்கும் மத சுதந்திரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

(ஊடகப் பிரிவு)