ஐ.எஸ். தீவிரவாதிகள் குறித்து இலங்கையும் இந்தியாவும் பேச்சுவார்த்தை


ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவல் மற்றும் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பில், இலங்கையும் இந்தியாவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கலந்துரையாடி இருந்தார். இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சிலர் இலங்கை ஊடாக சிரியா சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாகவும், அத்துடன் இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடனான தொடர்பு குறித்து கைது செய்யப்பட்ட சிலர் இலங்கைக்கு பிரவேசித்தமை குறித்த செய்திகளும் அண்மையில் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில் தென்னாசிய நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.