வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டும்: சுபையிர்







(எம். ஜே.எம்.சஜீத்) 

முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னனி தலைவர்கள் பின்பற்றிய மிதவாதக் கொள்கையை பின்பற்றி வில்பத்து விடயத்திலும் ஜனாதிபதி அவர்கள் செயற்பட வேண்டும் எனவும்,  அண்மையில் வெளியிடப்பட்ட வில்பத்து வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி அவர்கள் மீளப்பெற்று புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

 கிழக்கு மாகாண சபையின் 76ஆவது அமர்வு (25) பிரதி தவிசாளர் பிரசன்ன இந்திரக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வில்பத்து வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலே மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வில்பத்து சரணாலயம் தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தல் கடந்த 2017.03.28 வெளிவந்ததன் மூலம் சுமார் 40030.525 ஹெக்டெயர் காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்க்கதியாகியுள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதுடன் அவர்கள் வீதிக்கிறங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளமை பெரும் கவலை தரும் விடயமாகும்.

 வடமாகாணத்திலே முசலிப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர். குறிப்பாக அங்கு முஸ்லிம்கள் 85வீதமாகவும், தமிழர்கள் 13வீதமாகவும், சிங்களவர்கள் 2வீதமாகவும் வாழ்ந்துவரும் நிலையில் அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற 80வீதமான காணிகளை வனமாக்குகின்ற நடவடிக்கைகளை சில அதிகாரிகள் மேற்கொள்கின்றனர்.

கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே நல்லாட்சி அரசாங்கத்தை நாம் ஏற்படுத்தினோம். ஆனால் நல்லாட்சி அரசும் எமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரங்களையும் சூரையாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அதனை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் மக்கள் குறிப்பிடுவதனை அவதானிக்க முடிகின்றது.

 குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் முள்ளிக்குளம் மற்றும் சிலாவத்துறை பிரதேசங்களில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் தனியார்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இப்பிரச்சினைகள் இன்று ஒரு பேசு பொருளாக மாறி வருகின்றது. எனவே இதற்கான உடனடித் தீர்வு பெறப்பட்டு நல்லாட்சி அரசில் மக்கள் துயர் துடைக்கப்பட வேண்டும். இதற்காக ஜனாதிபதி அவர்கள் அதிக கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

 கடந்த 30வருட யுத்தத்தின் மூலம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் இரண்டு தலைமுறையினரின் கல்வி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல், மற்றும் சமூக ரீதியான விடயங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் பல இன்னல்களையும் சவால்களையும் அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். அவ்வாறான நிலையிலுள்ள வடமாகாண மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படாமலும் அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

 வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு வடக்காக அமைந்துள்ள முசலிப் பிரதேசத்தின் பெரும் பகுதிகளான மாவில்லு, வேப்பல், மரிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுரிப்பு, ஆகிய பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக இணைக்கப்பட்டு வனப்பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 3ஆம் பிரிவின் கீழ் மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம் என பிரகடனப்படுத்தப்பட்டள்ளன. எமது நாடடினுடைய ஜனாதிபதி அவர்கள் ரஷ்யாவுக்கு அண்மையில் விஜயம் செய்த போது இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

 இந்த வர்த்தமானி அறிவித்தல் பின்பற்றப்பட்டிருக்கின்ற நடைமுறை முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவிடயமாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பல தடவைகள் ஜனாதிபதி அவர்களுடன் பேசுவதற்கு முற்பட்ட போதும் அதற்கான நேரம் வழங்கப்படவில்லை என்ற கவலையினையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

 குறிப்பாக காடுகளின் எல்லைகளை மாற்றம் செய்ய வேண்டுமாயின் வனப்பாதுகாப்பு கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரால் தயாரிக்கப்பட்ட உத்தரவு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னரே மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த ஒழுங்கை மீறியே இது நடைபெற்றுள்ளது. இவ்விடயம் சம்மந்தமாக முஸ்லிம் சமூகம் இது ஒரு இனவாதிகளின் தூண்டுதலாக இருக்குமென சந்தேகிக்கின்றனர்.

 குறிப்பாக அரசாங்கம் வனங்களைப் பாதுகாக்கும் பொருட்டு தீர்மானங்களை எடுக்க முடிந்தாலும் அதுசம்மந்தமாக பொதுமக்களின் கருத்துக்களை அறியாமலும் அதற்கான கால அவகாசம் வழங்காமலும் அவசர அவரமாக மேற்கொண்ட இந்த வில்பத்து விடயம் மிகவும் கலையை ஏற்படுத்தியுள்ளது.

 எமது நாட்டிலே ஜனாதிபதியை ஜனநாயக ரீதியிலே நாம் தெரிவு செய்கின்றோம். இன்று எமது நாட்டிலே ஏற்படுத்தப்பட்டுள்ள நல்லாட்சிக்கு முஸ்லிம்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். எனவே வட மாகாண முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையினை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி அவர்கள் வில்பத்து சரணாலயம் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் எவ்வாறு அந்த வர்த்தனானி பிரகடனப்படுத்தப்பட்டிருந்ததோ அதனையே அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.