Apr 28, 2017

மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது
"மத உரிமை என்கின்ற அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி அடுத்த சமூகங்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அந்த வகையில், இறக்காமம் சிலை வைப்பு விவகாரத்தை அரசாங்கம் கையாளும் முறை ஏமாற்றமளிக்கிறது" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தெரிவித்துள்ளது.

அம்பாரை இறக்காமம்- மாணிக்கமடு, மாயக்கல்லி பிரதேசத்தில் பலவந்தமாக சிலை வைக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள  ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நமது நாடு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வேண்டி நிற்கும் இத்தருணத்தில் அதற்கு நேரதிரான நோக்கங்களைக் கொண்ட நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றன. இதற்கு முடிவு கட்டுவதற்கு பதிலாக இனவாத நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காத்து ஆதரவளித்து வருவதானது, கவலையையும் ஏமாற்றத்ததையும் அளிக்கிறது.


அந்த வகையில் அம்பாரை இறக்காமம் - மாயக்கல்லி   மலைப் பிரதேசத்தில் திடீரென பலவந்தமாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரமானது இனமுறுகலைத் தூண்டிவிடும் மற்றுமொரு இனவாத நடவடிக்கையாகவே இருக்கிறது. இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. 


இறக்காமம் பிரதேசம் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்ட பிரதேசமாகும். இங்கு மிக நீண்ட காலமாக முஸ்லிம், சிங்கள, தமிழ் மக்கள் எவ்விதமான பிரச்சினைகளும் இன்றி நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்போது தோன்றியிருக்கும் அனாவசியமான வெளித்தலையீடுகளே காலங்காலமாக நிலவும் சமூக நல்லிணக்கத்தைக் குழப்புவதாக அமைந்துள்ளது. அம்பாரையில் இருந்து தீகவாபி நோக்கிச் செல்லும் பாதையிலுள்ள சர்ச்சைக்குரிய இந்த இடத்தில் முஸ்லிம்களும், தமிழர்களுமே வசிக்கின்றனர். இங்கு பௌத்த வழிபாட்டுத் தலமொன்றை நிறுவுவதற்கான எந்தத் தேவையும் இருக்கவில்லை.

பௌத்தர்களது குடியிருப்புகள் இல்லாத இந்தப் பிரதேசத்தில் முதலில் புத்தர் சிலை ஒன்றை வைத்துவிட்டுப் போன இனவாதிகள், இப்போது மதகுருமார்களுக்கான தங்குமிடம் ஒன்றை அமைக்க முயற்சித்து வருகின்றனர்.

வெளியிலிருந்து ஆட்களை இறக்குமதி செய்து, இவ்விடத்தில் புத்தர் சிலைகளை அமைத்து வழிபட வேண்டிய தேவை ஏன் வந்தது என்ற பிரதேச வாதிகளின் கேள்வியில் உள்ள நியாயம் மறுக்கப்பட முடியாதது. தீகவாபியை சூழவுள்ள பரந்த பிரதேசத்தை சிங்கள் மயமாக்கும் நீண்ட நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்படுகிறது என்ற சந்தேகம் இங்கு வலுப்பெறுகிறது.  தொல்பொருள் சான்றுகள் என்ற பெயரில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் முஸ்லிம் தமிழ் மக்களது சமூக இருப்பையும் எதிர் காலத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கும் மற்றுமொரு நடவடிக்கையாகவும் இது தெரிகிறது.


நாடெங்கிலும் மக்களது தேவைகளுக்கேற்ப வழிபாட்டுத்தலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு மக்களினதும் அடிப்படை உரிமையுடன் தொடர்புடையது. அந்த உரிமையை நாம் மதிக்கின்றோம். ஆனால், ஒரு மதத்தைப் பின்பற்றும் மக்கள் எவருமே குடியிருக்காத ஒரு பிரதேசத்தில் பலாத்காரமாக அம்மதத்தின் பேரால் வழிபாட்டுத்தலங்கள் நிறுவப்படுவது நியாயமாகாது. மத உரிமை என்கின்ற அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி அடுத்த சமூகங்களின் பூர்வீகப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே இதனை நாம் பார்க்கிறோம்.  சமூக மத நல்லிணக்கத்தை விரும்பும் எவராலும் இதனை அனுமதிக்க முடியாது.


இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் அரசாங்க அமைச்சர் ஒருவர் இருந்து ஊக்குவிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி உடனடியாக தீர விசாரித்து நிலமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்கள் பிரதிநிதிகளுடன் குறிப்பாக இறக்காமம் மக்களுடன் பேசி மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அத்து மீறல்களை நிறுத்த வேண்டும்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post