நாங்கள் ஏமாறவில்லை ஏமாற்றம் அடைந்தவர்கள் அவர்களே - அமீர் அலி
(எச்.எம்.எம்.பர்ஸான்)


கோறளைப்பற்றுப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் மீராவோடை கிழக்கிற்கான தையல் பயிற்சி நிலையம் இன்று 23.04.2017 ம் திகதி மீராவோடை மதீனா வீதியில் பிரதியமைச்சர் சட்டத்தரணி அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி,
அரசியலும் அதிகாரங்களும் இறையவன் வழங்கிய விடயம். அவன் அதிகாரங்களை தந்தால் நாங்கள் இந்த சமூகத்திற்கும், பிரதேசத்திற்கும் நல்ல விடயங்களைச் சிறப்பாகச் செய்வோம். அவன் தராதர காலத்திலும் நாங்கள் அவனின் உதவியோடு இந்த சமூகத்திற்குச் செய்திருக்கின்றோம்.
 
நாங்கள் எப்போதும் நம்பிக்கையுடனும், உளத்தூய்மையுடனும் இருக்க வேண்டும். கடந்த காலங்களில் எங்களிடமிருந்தவர்கள் எல்லாவற்றையும் அனுபவித்து நல்ல முறையில் இருந்தார்கள். எங்களால் என்னென்ன விடயங்ளைச்செய்ய முடியுமோ, அத்தனையும் நாங்கள் அவர்களுக்குச் செய்திருக்கிறோம். இறுதியில் அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனது பார்வையில் ஏமாந்தது நாங்களல்ல. அவர்கள் தான் எனத்தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்,
இந்நிகழ்வில் நாங்கள் உங்களுக்கு தையல் இயந்திரமொன்றைத்தருவதன் மூலம் உங்களுடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட்டோம் என்றில்லை. ஆனால், ஏதோ உங்களை இதில் இணைத்துக் கொண்டிருக்கிறோம். இதனூடாக எதிர் காலத்தில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ள முடியுமமெனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களோடு மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.கே.ரகுமான், ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.முபாரக், ஆசிரியர்களான ஹக்கீம், சனூஸ் ஆகியோர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.