அரச அதிகாரிகள் மக்களுக்கானவர்கள் என்பதை உணர வேண்டும் - காதர் மஸ்தான்
அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்வதற்காக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான  கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்துக்கான இன்றைய அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் ஏற்பட்ட வன அதிகாரிகள் மற்றும் மக்களுக்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் பேசப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் மஸ்தான் எம்.பி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வுகள் பிரதேசத்தினுடைய அபிவிருத்திக்கு முக்கியமானதொன்றாகும் எனவே குறித்த பிரச்சினையுடன் தொடர்புடைய அதிகாரிகள் தங்களது நடவடிக்கைகளை பிரதேச செயலாளரின் அனுமதியை பெற்று செயற்படுத்தும்போது  பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைக்கப்படும் என நான் எதிர்பார்க்கின்றேன்.

யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தை அரசாங்க அதிகாரிகளினதும் மக்களினதும் ஒருமைப்பாட்டுடன் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கின்றது எனவே அதிகாரிகள் அரசியல்வாதிகளின் இலாபத்துக்காகவோ அல்லது தங்களது சுய லாபத்துக்காகவோ நம்மை நம்பியுள்ள அப்பாவி மக்களை துன்பப்படுத்தாமல் அவர்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள அரச அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெறும் வீட்டுத்திட்டத்தில் 10 வீதமான வீடுகளை வழங்குதல், சுகாதார ரீதியான அபிவிருத்திகள், விவசாயம், என்பன உள்ளிட்டட பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தா மற்றும் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டதுடன் வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் மாகாண சபை  உறுப்பினர்களான  ஜீ . டி. லிங்கநாதன், செ. மயூரன், ம. மயில்வாகனம், உட்பட நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்குட்பட்ட நிர்வாகம் சார் உயரதிகாரிகள், பொது அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

ஊடகப்பிரிவு