கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காமை ஏமாற்றமளிக்கின்றது.அ.அஸ்மின் 

 2017 ஏப்ரல் 27ம் நாள் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் நிலவிடுப்பு தொடர்பில் அரசின் செயற்பாடுகளின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் ஒன்றினை அனுஷ்டிக்குமாறு வவுனியா காணமல் போனோர் அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வழைப்பிற்கு பொதுவாக பல்வேறு தரப்பினரும் தம்முடைய ஆதரவுகளை வழங்கியிருந்தார்கள், எனினும் கிழக்கு மாகாணத்தில் ஒரு சில முஸ்லிம் பிரதேசங்களில் குறித்த ஹர்த்தால் நடவடிக்கை அமுலாக்கப்படவில்லை என்ற செய்திகளை அங்கிருக்கும் அன்பர்களினூடாக அறியக் கூடியதாக இருந்தது.

 இது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாகவே அமைந்திருக்கின்றது. என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விஷேட் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர் தனது அறிக்கையில், வடக்குக் கிழக்கு மக்கள் என்றவகையில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களும் பல்வேறு பாதிப்புகளை கடந்த 30வருடகால யுத்தத்தின் மூலம் எதிர்நோக்கியிருந்தார்கள், சமூகங்களுக்கிடையிலான விரிசல்களும் அதிகரித்துக்கொண்டே சென்றன.

 இவ்வாறான நிலையில் 2009களிலே யுத்தம் நிறைவுக்கு வந்தததன் பின்னர் குறித்த பிரதேசங்களிலே நிலைமைகள் வழமைக்குத் திரும்பத் தொடங்கின, இருப்பினும் இப்பிரதேச மக்களுக்கான முழுமையான தீர்வுகள் இதுவரை பெற்றுத்தரப்படவில்லை. 2009களுக்குப் பின்னர் வடக்குக் கிழக்கு மக்கள் பல்வேறு புதிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது, இதனை வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற எல்லா மக்களும் நன்கு அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். அதிலும் குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான பிரச்சினைகளும் நில ஆக்கிரமிப்பு தொடர்பிலான பிரச்சினைகளும் முக்கியமானவையாக மாறியிருக்கின்றன.

 யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இவ்விரண்டு பிரச்சினைகளும் தீர்வின்றித் தொடர்வதை பொறுத்துக்கொள்ளாத மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராட்டங்களை மேற்கொள்கின்றார்கள். இதனை அரசியலாக நோக்க முடியாது, இது மனிதாபிமான விடயமாகவே பார்க்கப்படவேண்டும், இத்தகைய மனிதாபிமானத்திற்கு வலுச்சேர்க்கும் போராட்டமொன்றிற்கு கிழக்கின் முஸ்லிம் பிரதேச மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்பதை எக்காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. 

தம்மோடு முறையாக தொடர்பாடல்களை மேற்கொள்ளவில்லை என்பதும், இதற்கான விளக்கங்கள் சரியாக மக்களுக்குத் தரப்படவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயங்கள் அல்ல.

 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற அரசியல் அமைப்புகள் இதற்கான ஆதரவினை வெளிப்படுத்தி நின்றார்கள் அதேபோன்று வடக்கு முஸ்லிம் மக்களும் தமது முழுமையான ஆதரவினை வழங்கினார்கள் அவர்கள் தமது அறிக்கையில் ஹர்த்தால் நடவடிக்கைகள், கடையடைப்பு போன்றன எமது மக்களின் அன்றாடவாழ்வையே அதிகம் பாதிக்கும்.

 அதன் மூலம் அரசாங்கத்திற்கோ அல்லது அரச இயந்திரத்திற்கோ அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை இருப்பினும் ஒட்டுமொத்த மக்களும் இதற்கு ஆதரவினை வழங்குகின்றபோது அது ஒரு மிகப்பெரிய செய்தியாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துச் சொல்லும் என நாம் நம்புகின்றோம். ஹர்த்தால் நடவடிக்கைகளின்போது அன்றாட மக்களின் சாதார வாழ்வுக்குப் பங்கம் ஏற்படாதவண்ணமும் அத்தியாவசியத் தேவைகளான சுகாதார வைத்திய தேவைகள், உணவுத் தேவைகளுக்கு இடயூறுகள் ஏற்படாத வண்ணமும் எமது எதிர்ப்பு நடவடிக்கை அமைதல் அவசியமாகும், அத்தோடு பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல்.

 வீதிகளி டயர்ர்களை எறித்து வீதிகளைப் பழுதடையச் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் வன்முறைகளைத் தூண்டும் விதமான செயற்பாடுகளும் முற்றாகத் தவிர்க்கப்படல் அவசியமாகும். என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். 

எனவே கிழக்கில் இவ்வாறு 2017 ஏப்ரல் 27ம் நாள் மனிதாபிமான கோரிக்கைகளுடனான ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காத முஸ்லிம் பிரதேசங்களின் செயற்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன என்று தெரிவிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகள் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஐக்கியத்திற்கும் அமைதிக்கும் சகவாழ்விற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துக்கொள்கின்றேன்.