இனவாதத்தை முடிக்க இதுதான் தீர்வு : ஹுதா உமர்
மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைத்த நாம் மைத்திரி அரசையும் வீட்டு அனுப்ப யோசிக்கிறோம். அடுத்த அரசாக யாரை தெரிவுசெய்ய எண்ணியுள்ளோம் ??

கடந்த அரசினால் முஸ்லிங்கள் மீது பலவித இனவாத செயல்கள் நடைபெற்றது என குற்றம் சாட்டி சகலரும் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட கௌரவ மைத்திரி அவர்களை நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

அப்போதைய நாட்களில் எமது முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் மஹிந்த அரசினால் முஸ்லிங்கள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் என மேடைக்கு மேடை மக்களிடம் பிரச்சாரம் செய்து இந்த நல்லாட்சியை உருவாக்கினார்கள்.இந்த நல்லாட்சி அரசின் மூலம் முஸ்லிங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதி பெற்றுத்தரப்போவதாக வாக்குறுதியும் அளித்தனர் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.என நம்புகிறேன்.

ஆனால் இப்போதைய சூழ்நிலையை நோக்குகின்ற போது கடந்த ஆட்சியில் ஒழிந்திருந்து இனவாதம் பேசியவர்கள் வீதிக்கு வந்து தாண்டவமாடுகின்றனர். பள்ளிவாசல் காணிகளை பெற்றுத்தரப்போவதாக கூறி வாக்குக்கேட்டவர்கள் இன்று மௌனமாக இருக்க முஸ்லிங்களின் காணிகளில் பௌத்த ஆலயங்கள் உருவாகிறது. எந்த சந்தர்ப்பத்திலும் இனவாதிகளோடு அமர்ந்து பேசமுன்வராத அரசை வீட்டுக்கு அனுப்பிய நாம் இன்று இனவாதிகளோடு அரசின் தலைவரே மூடிய அறையில் பேசுவதையும்,இனவாதிகளின் தலைவரோடு நாட்டின் நீதியமைச்சர் வளம்வருவதையும் பார்த்துக்கொண்டு அமைதியாக உறங்க காரணம் என்ன ?

பல தசாப்தங்களாக நிகழ்ந்த யுத்தத்தை போராடி இல்லாது ஒலித்த அரசை நாம் வீட்டுக்கு அனுப்பிய காரணம் முஸ்லிங்கள் மீது இனவாத கோரதாண்டவம் ஆடியவர்களை கண்டுகொள்ள வில்லை என்பதை தவிர வேறு எந்த காரணமுமில்லை.ஆனால் இந்த அரசில் ஜனாதிபதியே பல பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார் என்பதே கசப்பான உண்மை.

மாதக்கணக்கில் போராடிவரும் வில்பத்து மக்களின் பிரச்சினை முதல் இறக்காமத்தில் பிறந்திருக்கும் புத்த பெருமானின் சிலை வரை தொடரும் இந்த நல்லாட்சியின் கோரதாண்டவத்தை பார்த்து ரசிக்கும் முஸ்லிங்களின் கட்சித்தலைவர்கள் வாய்திறக்காமல், அப்பட்டித்திறந்தாலும் தமிழ் மொழிமூல ஊடகங்களில் மட்டும் வாய்திறந்துவிட்டு மௌனமாக இருப்பதே அரசியல் சாணக்கியமா ? அல்லது உத்தமத் தன்மையா ?

கிழக்கை தளமாக கொண்ட மு.கா ஆட்சி செய்யும் மாகாணமான அம்பாறையில் இரண்டு பிரதியமைச்சர்கள், ஒரு மாகாண அமைச்சர் நான்கு மாகாண சபை உறுப்பினர்கள்,கட்சியின் தவிசாளர், இன்னோரன்ன முக்கியஸ்தர்கள் இருந்தும் இறக்கம சிலை விவகாரத்தில் மு.கா கட்சியும் அதன் தலைமையான நல்லாட்சியின் பங்காளி அமைச்சர் ஹக்கீம் மௌனமாக இருப்பதும் அதேபோல 33000 வாக்குகளை பெற்ற ம.கா கட்சியும் அதன் தலைவருமான அமைச்சர் ரிசாத் அமைதியாக இருப்பதும் வேடிக்கையே !!

கடந்த ஆட்சியில் இனவாதம் மேலோங்கி இருந்தும் அமைதியாக அமர்ந்திருந்த அப்போதைய நீதியமைச்சரின் அமைதிக்கு காரணம் என்ன என்பதை தொலைக்காட்சியில் அப்பட்டமாக சொன்னார் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத்.மற்றைய கட்சித்தலைவரின் மெளனத்திற்க்கு காரணம் என்ன என்பது சகலரும் அறிந்ததே.

கடந்த ஆட்சியில் மௌனமாக இருக்க நீதிமன்றங்களில் இருந்த கோப்புக்களும்,பொலிஸ் நிலைய பதிவுகளும்,ஊழல் மோசடியுமே என்பதை அந்த அந்த கட்சி முக்கியஸ்தர்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றனர்.

ஆனால் இந்த ஆட்சியை ஆதரிக்க மு.காவும், ம,காவும் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டே முன்வந்தனர் என்பதை மக்கள் முன்னிலையில் அக்கட்சிகளின் அதியுயர் பதவிவகித்தவர்களே சாட்சிசொல்லியும் உள்ளனர்.

இப்படி இருக்க மக்கள் மத்தியில் மஹிந்த அரசுக்கு இருந்த அதிருப்தியை சரியாக பயன்படுத்தி தமது தலைகளை காப்பாற்றிக்கொள்ள இந்த அரசிடம் கோடிகளை பெற்றுக்கொண்டு கொடி தூக்கியவர்களால் இந்த சமுகத்தின் உரிமைகளை பெற்றுத்தர முடியாது என்பதை மஞ்சள் கவர் போராளிகளை தவிர்த்து ஏனையோர் ஏற்றுக்கொள்வர்.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிங்களின் தலை எழுத்தை திருத்தியமைக்க இந்த கட்சிபேத அரசியலுக்கு முழுக்குப்போட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.மின்னல் ரங்காவையும்,அதிர்வு முஷாரப்பையும்,வெளிச்சம் யக்கூப்பையும் மாறிமாறி விமர்சனம் செய்வது அல்ல நமது தேவை.

கல்முனை வாழ்முஸ்லின் சமூகம் .ஏ.ஆர் மன்சூர்,முஸ்தபா போன்ற அரசியல் தலைவர்கள் ஆதிக்கம் செலுத்திய இடத்தில் யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற கதையை அஸ்ரப் என்கிற ஒருவரால் பொய்ப்பிக்க முடியுமாக இருந்தால் ஏன் இந்த சமூகம் பழைய பொம்மைகளையே திருப்பியும் பாராளுமன்றம் அனுப்பிவிட்டு புலம்புகிறது என்பதே புதிராக உள்ளது.

ஆளுமை மிக்க புதியவர்களை உரிய இடங்களுக்கு அனுப்பி அதன் மூலம் இந்த சமூகம் பயனடையவேண்டிய தேவை இப்போது உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்,

அசைக்க முடியாது இருந்த புலிகளை ஒழித்துக்கட்டிய மஹிந்த எனும்மா வீரனின் தலைமையிலான அரசை கவிழ்க்க முடிந்த முஸ்லின் சமூகத்திற்க்கு இந்த கோடிக்கணக்கில் பேரம் பேசி அரசியல் செய்யும் தலைவர்களை தோற்கடிக்க முடியாமளுமில்லை என்பதை உணர வேண்டியவர்கள் உணரவேண்டிய காலம் கனிந்து வருகிறது.

மக்களால் மாற்றம் வரும் என்பதை நம்பும் என்னை போன்ற பலரின் கருத்துக்கள் பல இடங்களில் ஆதிக்கம் செலுத்துவதை உணர்ந்து இந்த அரசாங்கத்தை குறைசொல்வதை நிறுத்திவிட்டு மக்களே சிந்தித்து செயலாற்ற முன்வரவேண்டும்.முனாபிக் அரசியல் செய்யும் தலைவர்கள் இருக்கும் வரை மஹிந்த ஆட்சியில்லை,மைத்திரி ஆட்சியில்லை கோத்தபாய ஆட்சியில்லை,சஜித்பிரமதாச ஆட்சி வந்தாலும் நசுக்கப்படுவது நசுக்கப்படுவதே........

நாட்டின் தலைவர்களை மாற்றமுதலில் சமூகத்தின் தலைவர்களுக்கு பாடம் கற்பியுங்கள்.கற்பிப்போம் .