பிரித்தானியாவிலுள்ள வடகொரிய நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களுக்கு நிதியளிப்பதான குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரித்தானியாவிலுள்ள வடகொரிய நிறுவனத்தின் சொத்துக்களை பிரித்தானிய அரசு முடக்கியுள்ளது.
இது குறித்த மேலதிக தகவல்களை வெளியிடுவதற்கு பிரித்தானிய திறைசேரி மறுத்துவிட்டது.

எனினும் வடகொரியா மற்றும் வடகொரிய நிறுவனங்களுடன் தொடர்புடைய ஐ.நாவின் தடைகளை பிரித்தானியா முழுமையாக கடைப்பிடித்து செயற்படுத்தியுள்ளது என திறைசேரி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் ஆட்சியை ஆதரிக்க பயன்படுத்தப்படும் கணிசமான அந்நிய செலாவணி வருமானத்திற்காக லண்டனில் அமைந்துள்ள கொரிய தேசிய காப்பீட்டு நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

தெற்கு லண்டனில் அமைந்துள்ள குறித்த நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மூடப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டில் குறித்த நிறுவனம் 130 பில்லியன் சொத்துக்களை கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமையகம் பியோங்யாங்கிற்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.