Apr 27, 2017

குண்டாஞ்சட்டிக்குள் குதிரையோட்டும் ஹக்கீம் - அஸாத்சாலி குற்றச்சாட்டு

மறிச்சுக்கட்டிப் பிரதேசத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் பீ பி அபயகோனை 27 ஆம் திகதி (இன்று) அழைத்துச்சென்று வர்த்தமானிப் பிரகடன அறிவிப்பை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பேன் என பகிரங்கமாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த மு கா தலைவர் அமைச்சர் ஹக்கீம், முசலியில் அதிகாரிகளை அழைத்து சந்திப்பொன்றை ஏற்படுத்தி மக்களின் நம்பிக்கையை தகர்த்துவிட்டார் இதற்கான முழுப்பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டுமென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். மறிச்சுக்கட்டி பிரதேச மக்களின் எரியும் பிரச்சினையில் அமைச்சர் ஹக்கீம் அரசியல் குளிர்காய முனைவதாகவும் அசாத் சாலி மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினால் ரஷ்யாவில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வர்த்தமானிப்பிரகடனம் வெளிவந்தவுடன், அதனை இரத்துச் செய்வதற்காக நான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். ஜனாதிபதியின் செயலாளரை பலதடவைகள் சந்தித்ததுடன் ஜனாதிபதியையும் சந்தித்து இந்தப் பிரச்சினையின் ஆழத்தை தெளிவுபடுத்தினேன்.

அதே போன்று வன்னியின் பிரதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் இந்தப் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் மிகவும் காட்டமாக பேசியிருக்கின்றார். அத்துடன் ஜம்இய்யதுல் உலமா,முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களான மஜ்லிஸுஷ் ஷூரா, முஸ்லிம் கவுன்சில், , முஸ்லிம் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவை உட்பட இன்னும் பல்வேறு அமைப்புக்களும் இந்த வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பில் தமது வருத்தத்தை வெளியிட்டதுடன் வர்த்தமானியை இரத்துச் செய்ய வேண்டுமென அரசாங்கத்திடம் விடாப்பிடியாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் தான் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் ஓர் உயர்மட்டக் கூட்டமொன்று கூட்டப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராயப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முஜிபுர்ரஹ்மான், ஜம்இய்யதுல் உலமாப் பிரதிநிதிகள், முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள், புவியியல் துறைப் பேராசிரியர் நௌபல் மற்றும் நான் உட்பட அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வர்த்தமானி அறிவித்தலின் பாதிப்பினை எடுத்துரைத்தோம்.
வில்பத்துத் தொடர்பான வரைபடங்கள், மறிச்சுக்கட்டிப் பிரதேச நில வரைபடங்கள், மக்களின் வாழ்விட அமைவு முறைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி தெளிவான விளக்கங்களுடன் பேராசிரியர் நௌபல், ஜனாதிபதியின் செயலாளருக்கும், வன பரிபாலன, வன ஜீவராசிகள் திணைக்கள, நில அளவைத் திணைக்கள உயரதிகாரிகள் ஆகியோருக்கு விளக்கினார்.

இந்த விடயங்களை அறிந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இன்னும் ஒரு வார காலத்திற்குள் இதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்திருந்தார்.
எனினும் இதனைக் குழப்பியடிக்கும் நோக்கில் முன்னாள் எம்பியான ஹுனைஸ் பாரூக் அந்தக் கூட்டத்தில் அக்கறை காட்டாது வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஜம் இய்யதுல் உலமா வில்பத்துத் தொடர்பில் ஏற்பாடு செய்த கூட்டத்தை புரக்கணித்து கல்முனைக்கு அமைச்சர் ஹக்கீம் சென்றிருந்தார். எனினும் நாங்கள் ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து மூன்று நாட்களின் பின்னர் ஹக்கீம் தனது சகாக்களையும் அழைத்துக் கொண்டு வில்பத்து தொடர்பில்  ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து இதே பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தான் அவசரமாக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால் நாடு திரும்பிய பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரை மறிச்சுக்கட்டிக்கு அழைத்துச் சென்று வர்த்தமானியை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

நாங்கள் சந்தித்த போது ஒருவார காலத்தில் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன் என உறுதியளித்திருந்த ஜனாதிபதியின் செயலாளரை ஹக்கீமின், குழப்பகரமான செயற்பாடே வில்பத்துப் பிரச்சினை தொடர்ந்தும் இழுபட்டு போவதற்கு பிரதான காரணமென்பதை நான் பகிரங்கமாகத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

ஜனாதிபதியின் செயலாளர் அபயகோனை அழைத்துச் செல்வேன் எனக்கூறியவர் இன்று முசலிப் பிரதேச சபையில்சில குறிப்பிட்ட திணைக்களங்களின் அதிகாரிகளைச் சந்தித்து  மீண்டும் இதே பிரச்சினையைக் கூறி அதிகாரிகளை பிழையாக வழிநடத்துகின்றார். எப்படி இந்தப் பிரச்சினைய கையாளப்போகின்றார்? இனியும் அந்த அப்பாவி மக்களை எவ்வாறு ஏமாற்றப் போகின்றார் என்பது எமக்கு விளங்கவில்லை.
ஏற்கனவே ஜனாதிபதி செயலகத்தில் நன்றாக அரைக்கப்பட்ட மாவினை, முசலிப் பிரதேச செயலகத்திலும்தனது கட்சிக்காரர்களை வைத்து மீண்டும் அதே மாவைஅரைக்கிறார். பூதாகரமாக கிளர்ந்தெழுந்துள்ள ஒரு சமூகத்தின் பிரச்சினையில் அரசியல் ஆதாயம் பெறுவதற்கு அவர் முயற்சிக்கின்றார். ஹக்கீம் குண்டாஞ்சட்டிக்குள்ளே குதிரையோட்ட முயற்சிக்கின்றார். அவர் இதுவரையில் முஸ்லிம் சமூகத்தின் எந்தப் பிரச்சினையையும் தீர்த்ததாக வரலாறு இல்லை. 

வில்பத்து தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் கொழும்பு ரேனுகா ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டை அமைச்சர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிஷ்கரித்தமையை நான் இங்கு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எது எப்படி இருந்த போது வெண்னை திரண்டு வந்த போது தாழியை உடைக்கும் செயற்பாடுகளையே ஹக்கீமும் அவரது கட்சிக்காரர்களும் மேற்கொள்வது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இன்று (27)அவர் வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதியின் செயலாளரை அழைத்துச் செல்லவில்லை. மறிச்சுக்கடி மாவில்லுப் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்ய முடியாவிட்டால் அதற்குரிய முழுப் பொறுப்பையும் அவரே ஏற்க வேண்டும் என்பதை நான் பகிரங்கமாகத் தெரிவிக்கின்றேன்.

                                                                                                                                                                                                           அஸாத் சாலி                                                                                                                                                                                தலைவர் - தேசிய ஐக்கிய முன்னணி
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post