முகமது நபிகளை ஏற்க மறுத்த நபருக்கு மரண தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சவுதி அரேபியா நாட்டில்  முகமது நபிகளை ஏற்க மறுத்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சவுதியில் உள்ள Hafar al-Batin என்ற நகரில் Ahmad Al Shamri(20) என்பவர் வசித்து வந்துள்ளார்.

அடிப்படையில் கடவுள் நம்பிக்கை இல்லாத இவர் அடிக்கடி பொது இடங்களில் கடவுளையும் இஸ்லாமியத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து வந்துள்ளார். இது மட்டுமில்லாமல், இஸ்லாமிய இறைத்தூதரான முகமது நபிகளை கடுமையாக விமர்சனம் செய்து அதனை வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.

நபரின் இந்நடவடிக்கை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் கடந்த 2014-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு வருடமாக நடைபெற்ற விசாரணையின் இறுதியில் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதும் அவரக்கு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்துள்ளது.
ஆனால், இத்தீர்ப்பை எதிர்த்து நபர் மேல் முறையீடு செய்துள்ளார்.

அதில், ‘வீடியோக்களை வெளியிட்டபோது தான் மது போதையில் இருந்ததால் சுயநினைவின்றி குற்றம் செய்துவிட்டதாக’ விளக்கம் அளித்துள்ளார். இவரது மேல் முறையீட்டு வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றம் இல்லை. ஆனால், இதனை பொது இடங்களில் கடுமையாக விமர்சனம் செய்தது தான் குற்றம்’ எனக் கூறி நீதிபதி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

நீதிபதி மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் நபருக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LankaSri