இனவெறியின் உச்சம்: கருப்பின பெண்ணை காரை ஏற்றி கொன்ற வாலிபர்கள்ஜேர்மனி நாட்டில் புகலிடத்திற்காக காத்திருக்கும் கருப்பின பெண் ஒருவரை அந்நாட்டு வாலிபர்கள் காரை ஏற்றி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்த Shaden M(22) என்ற இளம்பெண் ஒருவர் ஜேர்மனியில் உள்ள Brandenburg நகரில் குடியேறி வசித்து வருகிறார். புகலிடத்திற்காக காத்திருக்கும் இவர் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலும் பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 15-ம் திகதி தோழிகளுடன் இரவு விருந்துக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது. சுமார் 30 கி.மீ வேகத்தில் வந்த கார் ஒன்று இளம்பெண் மீது பயங்கரமாக மோதிவிட்டு சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். இக்காட்சியை கண்டு உதவி செய்யாமல் காரில் இருந்த 3 வாலிபர்களும் கீழே இறங்கி வந்துள்ளனர்.

பின்னர், இளம்பெண்ணிற்கு அருகில் சென்று வாய்விட்டு சிரித்துக்கொண்டு கிண்டலாக பேசியுள்ளனர். ‘இது எங்களுடைய நாடு. இங்கு உன்னைப் போன்றவர்கள் இருந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும். எகிப்து நாட்டில் தெருக்கள் பலவீனமாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், ஜேர்மனியில் எங்கு சென்றாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

உன்னுடைய தாய்நாட்டிலேயே இருந்திருந்தால் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது’ எனக் கூறிவிட்டு வாலிபர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
சிறிது நேரத்திற்கு பிறகு இளம்பெண்ணை சிலர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், 3 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுனரான 20 வயது வாலிபர் மற்றும் 18, 19 வயதுடைய நண்பர்கள் என மூன்று பேரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.