வன்னி மாவட்டத்தில் ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டம் வெற்றி - மஸ்தான்

 
 
வன்னி மாவட்டத்தில் நில மெஹவர என்னும்  ஜனாதிபதி மக்கள் சேவை வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.

நில மெஹவர வேலை திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வவுனியா செட்டிகுளம் பிரதேச மக்களுக்கான ஜனாதிபதி மக்கள் சேவையையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் மஸ்தான்.எம்.பி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதியினுடைய எண்ணக்கருவில் உருவான இவ்வேலைத்திட்டம் வன்னி மாவட்டத்திலும் வெற்றிவாகை சூடி வருகின்றது. பல்வேறு காரணங்களாலும் தங்களது அடிப்படை சேவைகளை பெறத்தவறிய மக்களுக்கு இது பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தினூடாக மக்கள் அரச அலுவலகங்களையும், அதிகாரிகளையும் நாடும் தேவைப்பாடு வெகுவாக குறையும் என நான் எதிர்பார்க்கின்றேன். முதன் முதலாக பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை மிக விரைவில் எமது வன்னி மாவட்டத்திலும் ஆரம்பிக்க உதவுமாறு நான் ஜனாதிபதியுடனும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன், அதன் பிரதிபலனாக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையிட்டு நான் உரியவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது அலுவலகத்திற்கு வரும் அதிகமான மக்களிடம் காணப்படும் பிரச்சினைகள் இவ்வாறான அடிப்படை பிரச்சினைகளேயாகும். எல்லா பிரதேச செயலகங்களிலும் மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கான சேவைகளை பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் இருந்தாலும், மக்களின் தெளிவின்மை காரணமாக கால நீடிப்பும் சில சேவைகளை பெற்றுக்கொள்ளாமலும் விட்டு விடுகின்றனர்.

எது எவ்வாறு இருப்பினும் தங்களுக்கு கிடைக்கப்பெறாத அனைத்து சேவைகளையும் இந்த ஜனாதிபதி மக்கள் சேவையினூடாக பெற்று இந்த வேலைத்திட்டத்தை பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளுமாறும் விரைவில் ஏனைய மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

செட்டிகுளம் உப பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, மாகாணசபை உறுப்பினர்களான இந்திர ராஜ மற்றுமற்றும் ஜயதிலக்க கலந்துகொண்டதுடன் அதிகாரிகள் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.ம் 

ஊடகப்பிரிவு.