மஹிந்தவிற்கு ரணில் வைத்துள்ள பொறிபுனித பாப்பரசர் இலங்கை வந்த போது கூட காலி முகத்திடலை மக்களால் நிரப்ப முடியாமல் போனது. இந்நிலையில் கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்திற்கு அவ்விடம் வழங்கப்பட்டமையானது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவிற்கு வைத்துள்ள பொறியே என தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட்சி , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் கண்டியில் அல்ல கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் வெற்றிக்கரமாக நடைப்பெறும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
கூட்டு எதிர் கட்சியின் விஷேட ஊடக சந்திப்பில் பொரல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய் கிழமை நடைப்பெற்றது. இதன் போதே மேற்கொண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கூறுகையில் ,                           கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளது. நாட்டை சமஷ்டியை நோக்கி நகர்த்தல் , ஜிஎஸ்பி சலுகைக்காக நாட்டை காட்டிக் கொடுத்தல் , சீனா , இந்தியா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகளுக்கு தேசிய வளங்களை விற்பணை செய்தல் மற்றும் இராணுவத்திற்கு எதிரான பழிவாங்கல்களை கண்டித்து கூட்டு எதிர் கட்சி மே தின கூட்டத்தை நடாத்த உள்ளது.
எதிரணியில் செயற்படும் 52 பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். அதே போன்று பெருந்திரளான மக்கள் வருகை தரவுள்ளனர். புனித பாப்பரசர் இலங்கை வந்த போது கூட காலி முகத்திடலை மக்கள் நிரப்ப முடியவில்லை. இந்நிலையில் மே தின கூட்டத்தை நடத்துவதற்கு காலி முகத்திடலை கூட்டு எதிர் கட்சிக்கு அரசாங்கம் வழங்கியமையானது எம் மீதுள்ள அன்பினால் அல்ல. மாறாக மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்டு வைப்பதற்காகவே காலி முகத்திடலை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.
ஆனால் மக்கள் அணித்திரண்டு கூட்டு எதிர் கட்சியின் மே தின கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின கூட்டம் கண்டியில் நடைப்பெற வில்லை. கொழும்பு காலி முகத்திடலில் நடைப்பெறும் மே தின கூட்டமே சுதந்திர கட்சியின் மே தின கூட்டம். எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பவர்கள் முதலில் தாம் எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.
எனவே கண்டிக்கு போகவே தேவை எமக்கில்லை. சுதந்திர கட்சிக்கான மக்கள் ஆணை மஹிந்த ராஜபக்ஷவிற்கே உள்ளது என குறிப்பிட்டார்.