Apr 24, 2017

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி வீதம் குறைவடைந்து செல்கின்றது - ஷிப்லி பாறுக்

 
 
எமது சமூகத்தை பொருத்த மட்டில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்லுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையினை அவதானிக்கின்றபோது அது வீழ்ச்சியடைந்துகொண்டு வருகின்றது. யுத்த காலத்தின் போது நாம் கல்வி கற்பதில் ஆர்வம் செலுத்திய வீதத்தை விட யுத்தம் முடிவடைந்த காலப்பகுதியில் எமது கல்வியின் வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின், கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட செம்மண்ணோடை அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் மாகாண சபை நிதியொதுக்கீட்டிலிருந்து நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது மாடி வகுப்பறைக் கட்டிட திறப்பு விழாவும், க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் கௌரவிப்பு விழாவும் 2017.04.20-ஆந்திகதி-வியாழக்கிழமை நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சி வீதம் மிகவும் குறைவடைந்துகொண்டு வருகின்றது. இதன் காரணமாக அரச உயர் பதவிகளில் எமது சமூகத்தினை சார்ந்தவர்கள் மிகவும் குறைந்தளவான வீதத்திலேயே கடமையாற்றுகின்றனர். இத்தகையதொரு நிலைப்பாட்டிலேயே இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் தமது உரிமை சார்ந்த விடயங்களைக்கூட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்த மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பாக அரசியல் வாதிகளின் ஈடுபாடுகள் குறைவாக இருந்தாலும்கூட அங்குள்ள அரச அதிகாரிகளினூடாக அப்பிரதேசங்களுக்கான அனைத்து விதமான அபிவிருத்தி பணிகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களிடத்தில் தற்போது இருக்கின்ற ஓரளவு அரசியல் அதிகாரம்கூட இல்லாதிருந்தால் எமது சமூகத்தை யாருமே திரும்பிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். இருப்பினும் வெறுமேனே அரசியல் அதிகாரங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு எதனையும் சாதிக்க முடியாது. மாறாக நாம் கல்வியில் முன்னேறிய ஒரு சமூகமாக மாற வேண்டும்.

ஆனால் துரதிஷ்டவசமாக விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக எமது சமூகத்திலுள்ள ஆண் மாணவர்களுக்கு முறையான கல்வியினை பெற்றுக்கொள்வதிலுள்ள ஆர்வம் குறைவடைந்துகொண்டு செல்லுகின்றது.

எனவே இத்தகைய ஒரு நிலையினை மாற்றி எமது மாணவர்களுக்கு முறையான கல்வியினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எமது சமூகத்தை கல்வியில் சிறந்த முன்னேற்றமிக்க ஒரு சமூகமாக மாற்றியமைக்க வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது.

அத்தோடு, நாங்கள் இப்பாடசாலைக்கு பல தடவைகள் வந்துள்ளோம். இப்பாடசாலையின் தேவைப்பாடு கருதி கட்டடங்களை கட்டுவதற்குரிய இடப்பற்றாக்குறை இப்பாடசாலையில் காணப்படுகின்றது. பொதுவாக இவ்வாறான பிரச்சினைகள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே காணப்படுகின்றது. எனவும் தனது உரையில் தெரிவித்தார்.

இக்கட்டடத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் ஆகியோரினால் கடந்த 2016.05.26ஆந்திகதி-வியாழக்கிழமை அடிக்கல் நடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எம்.எஸ். சுபைதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன் அவர்களும் விஷேட அதிதிகளாக பாடசாலை வேலைகளுக்கு பொறுப்பான மாவட்ட பொறியியலாளர் ஏ.எம்.எம். ஹக்கீம், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் மற்றும் சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் தலைவர் வை.எல்.எம். மன்சூர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post