பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் எந்தவொரு நபரைக்கு எதிராக நடவடிக்கை - எஸ்.எஸ்.பி


பாறுக் ஷிஹான்

 தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில்  இன்றைய தினம் (27)  மேற்கொள்ளப்படும் ஹர்த்தாலினால் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரனிஸ்லஸ் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஆதரவாக கதவடைப்பு போராட்டத்தை மக்கள் அமைதியாக மேற்கொள்ள வேண்டும். இன்றைய தினம் விஷேட பொலிஸ் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவற்றை விட தேசிய பாதுகாப்புக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வீதிகளில் ரயர்களை போட்டு எரித்தல் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.