வாழும் மனிதம் அக்கரைப்பற்று ஜெஸ்லி"நல்லது சொல்ல என்ன தகுதி வேண்டும்???"

மஹ்ரிப் தொழுகைக்காக நூறானியா பள்ளியினுள் நுழைந்தேன் முன்வாயிலிலேயே ஜெஸ்லி அமர்ந்திருந்தார். 

ஜெஸ்லி சிறுவயது தொடக்கம் எனக்கு பழக்கமானவர். சிறுவயதில் பலர் அவரை கேலி செய்வதும் நோவினை செய்வதும் அதிகம் இருந்தும் அவர் இவ்வுலகில் யாருக்குமே ஒரு நோவினை செய்யாத மனிதர். இறைவன் நம்மை முழு அறிவுகொண்டு படைத்திருந்தாலும் நமக்குள்ளேதான் போட்டி, பொறாமை, எரிச்சல், கோபம், கள்ளம், கபடம் என ஆயிரம் மிருக குணங்கள் பரவிக்கிடக்கின்றன. ஆனால் ஜெஸ்லி போன்றவர்களுக்கு சாந்தியான நிம்மதியான திருப்தியான உள்ளமும் மனதும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நாம் அவர்களை கேலி செய்கிறோம்.

இருந்தபோதிலும் எனக்கு சிறுவயதில் இருந்து ஜெஸ்லி மீது மரியாதை கலந்த அன்பு இருந்தது. நகைச்சுவையாக பேசும் ஒரு சகோதரனாகவே அவரை எண்ணிக்கொள்வேன். அதற்கேற்றாற்போல் அவரும் பழகுவார். எங்கேனும் பள்ளிவாசலில்தான் அவரைக்காண கிடைக்கும், அப்போதெல்லாம் ஸலாம் சொல்லி கைகுலுக்கிக்கொள்வோம்.

என்னை கண்டதும் ஸலாம் சொன்ன ஜெஸ்லியிடம் பதில் சொல்லிவிட்டு சுகமா என்று கேட்டேன், ஆம் என்றவர் என் கால்களை நோக்கி தன் கைகளை நீட்டி ஏதோ சொன்னார். எனக்கு புரியவில்லை. மீண்டும் என்ன என்று கேட்டேன். மீண்டும் என் கால்களை நோக்கி கையை நீட்டி பின்னர் பள்ளியின் பக்கம் கையை நீட்டி ஏதோ சொன்னார். எனக்கு புரியாமலேயே இருந்தது, நேரம் செல்ல இருப்பதால் தொழுதுவிட்டு வந்து பேசுகிறேன் என்று கூறிவிட்டு வுழூ செய்யுமிடத்திற்கு வந்தேன்.

வுழூ செய்வதற்காக நீர்த்திருகியை சுழற்றியதும் வீறுகொண்டு பாய்ந்தது தண்ணீர். காற்சட்டையின் ஒரு பகுதி கரண்டைக்காலுக்கு கீழே நனைந்துவிட குனிந்து காற்சட்டையை உயர்த்தினேன். அப்போதுதான் என் அறிவுக்கு புரிந்தது ஜெஸ்லி என்ன சொன்னார் என்று. என் காற்சட்டை நீளமாக இருந்ததால் அதனை "மடித்து அல்லது உயர்த்திக்கொண்டு உள்ளே செல்லுமாறு" கூறுயிருக்கிறார் ஜெஸ்லி. இதுதான் அவருக்கும் எமக்கும் இடையிலான வித்தியாசம்.

யார் உபதேசம் செய்கிறார்கள் என்பதுவல்ல விடயம், அவர் என்ன உபதேசம் செய்கிறார் என்பதுவே சிந்திக்கவேண்டியது. நல்லுபதேசம் செய்வதற்கு தகுதி, அறிவு, வயது, அனுபவம் எதுவுமே தேவையில்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது கேட்டு நடப்பதற்கு தாராள மனம்வேண்டும். அதுதான் நிறையப்பேரிடம் இல்லாமல் போய்விட்டது.

#ஜெஸ்லி_வாழும்_மனிதம்

✍️அஷ்ரப்