கொழும்பு நகரிற்கு மின்சார பேருந்துகள்கொழும்பு மற்றும் சதாசன்ன பிரதேச மக்களின் பயண வசதிகளை இலகுவாக்குவதற்காகவும், போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வாகவும் மின்சக்தியில் இயங்கும் மின்சார பேருந்துகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

நிதி அமைச்சர் மற்றும் மாநகர மற்றும் மேல் மாகாண சபை அபிவிருத்தி அமைச்சரின் உதவியுடன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சார பேருந்து வண்டிகள், இலங்கைக்கு கொண்டு வந்தவுடன் முதலாவதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளது. பேருந்துகளுக்கான முதன்மை வீதிகளில் இந்த பேருந்து போக்குவரத்தில் ஈடுபடவுள்ளது.

இதன் ஊடாக பயணிகளுக்காக நெரிசல் குறைவதோடு, சுற்று சூழல் பாதிப்பை குறைத்துக் கொள்ளவும் முடியும். தற்போது வரையில் 3 வகை பேருந்துகள், மாதிரிகளுக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த பேருந்துகள் காலை நேரத்தில் 3 மணி நேரங்களும், மாலை நேரத்தில் 3 மணி நேரங்களும் பயணிக்கின்ற நிலையில், இரவு 8 மணி முதல் 12 மணி வரை விசேட சேவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் சொகுசு பேருந்து பயன்படுத்தப்படுவதனால் கொழும்பு நகரத்திற்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள முடியும் என கெமுனு விஜேரத்ன மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.