Apr 27, 2017

இறக்காமம், மாணிக்கமடு விவகாரம்: இந்த நேரம் ஆளுநரிடம் பேசுவது முட்டாள்தனமாகும்

 
 
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த ஆசிரமம் ஒன்றை அமைப்பதற்கு பலவந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது அவரது பலகீனத்தின் வெளிப்பாடாகும்.

கிழக்கு மாகாணத்திலே முதலமைச்சர் உட்பட அமைச்சர்களையும் பெரும் பலத்தையும் கொண்டு ஆட்சியமைத்திருக்கும் இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் பௌத்த ஆசிரமம் ஒன்றை அமைப்பதற்கு பலவந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வது மு.காவின் வெட்கக்கேடான செயலாகும்.

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி புத்தர் சிலை வைக்கப்பட்டது. அப்போது இறக்காமம் பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரன நிலைமையினைக் கருத்திற்கொண்டு புத்தர் சிலை வைத்த மறுநாள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து  இவ்விடயமானது நல்லாட்சி அரசாங்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களில் ஒரு சில தீய சக்திகளின் செயற்பாடாகவே புத்தர் சிலை விவகாரத்தை கருதுகிறேன் எனத்தெரிவித்தார்.

அத்துடன் நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி சிலை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது அவர்கள் நீதிமன்றில் ஆஜராக்கப்படுவர் எனத் தெரிவித்து விட்டுச்சென்றார். அதன் பின்னர் நீண்ட நாட்களாக மௌனமாக இருந்த ரவூப் ஹக்கீம் தற்போது கிழக்கு மாகாண ஆளுநருக்கு வேண்டுகோள் விடுப்பது அவரின் வங்குரோத்து அரசியலாகும்.

மாணிக்கமடு சிலை வைப்பு மற்றும் விகாரை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கிடையே உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தும் என்கின்ற அபாயம் காணப்படும் இக்காலகட்டத்தில் மு.கா தலைவர் கீழ் மட்ட அதிகாரிகளிடம் இந்த விடயம் தொடர்பில் ஏன் பேச வேண்டும். இந்த விடயம் தொடர்பில் ஹக்கீமின் நடவக்கைகள் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சந்தேகம் நிலவுகிறது.

குறிப்பாக கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கும், நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம் சமூகத்தின் ஆணையைப் பெற்றுக்கொடுத்த மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் இவ்விடயம் தொடர்பில் ஏன் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேசவில்லை அப்படி அவர் ஏதும் பேசியிருந்தால் நல்லாட்சி அரசின் முடிவு என்ன? அல்லது ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இதுவரை பேசவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? என்பதனை அவர் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை வாராந்தம் புதன்கிழமைகளில் அமைச்சரவைக் கூட்டத்தில் சந்தித்துக்கொள்ளும் மு.கா தலைவர் மாணிக்கமடு பிரச்சினை தொடர்பில் பேசி தீர்வினைப் பெற முயற்சிக்காது கிழக்கு மாகாண ஆளுநருக்கும், கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிடுவது வேடிக்கையான விடயமாகும். இது தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் அறிக்கை விடுவதற்கான ஒரு பிற்போக்கான அரசியல் நடவடிக்கையினையே வெளிப்படுத்துகிறது. இதனை அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் கடைப்பிடித்து வருகின்றனர். தவைரின்  வழியினையே அவர்களும் பின்பற்றுகின்றனர்.

முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலைவர்கள் தங்களது பதவியினையும், பொருளாதாரத்தினையும் பாதுகாப்பதற்காகவே மாணிக்கமடு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் மௌனம் காக்கின்றனர். பேசவேண்டிய இடத்தில் மௌனமாக இருந்துவிட்டு தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் அறிக்கை விடும் தந்திர அரசியல் நடவடிக்கைகளை அதிகாரத்தோடு இருக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post