சீரற்ற காலநிலை இதுவரை 26 பேர் பலியாகினர் பலரை காணவில்லைநாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான  மக்கள் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கபட்டுள்ளனர்.

களுத்துறை வெயங்கல்ல பகுதியில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

புளத்சிங்கள, போகஹவத்தை மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி ஜீ.டீ.ஆர்.ருத்ரிகு தெரிவித்தார்.

இதேவேளை, இப்பகுதியில் மேலும் ஒரு வீடு, மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் சுவர்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், 10 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் இக்கிராமங்களிலிருந்து வெளியேறியவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகம் வழங்கி வருவதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.கே.சேனாதீர தெரிவித்துள்ளார்.

வெயங்கல்ல, அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவு காரணமாக 04 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்று ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு நடவடிக்கைக்காக முப்படையினரும் களத்தில் குதித்துள்ளனர்.

காலி மற்றும் மாத்தறை பிரதேசங்களில் நிவாரண நடவடிக்கைகளுக்காக நூற்றும் அதிகமான இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை இராணும் கூறியுள்ளது.

இது தவிர காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் நிவாரண பணிகளுக்காக கடற்படையினரும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நெலுவ, மொரவக்க, கம்புறுபிட்டிய போன்ற பிரதேசங்களில் 04 படகுகள் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்திற்கு 01 படகும், களுத்துறை, கலவானை பிரதேசங்களுக்கு 02 படகுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை கூறியுள்ளது.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் விமானப் படையினரின் இரண்டு ஹெலிகப்டர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

பெல் 212 மற்றும் எம்.ஐ. 17 வகை ஹெலிகப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை கூறியுள்ளது.

அத்துடன், கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்னை மற்றும் கொக்மாதுவை நுழைவாயில்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன என்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பிரதிப் பணிப்பாளர் ஆர்.ஏ.டி.கஹட்டபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த நுழைவாயில்களைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள், மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று 150 மி.மீ வரையிலான மழை வீழச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.