ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு - 80 பேர் பலி, 350 பேர் காயம்ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள்.

குண்டுவெடிப்பில் சிக்கியவர்கள் அங்கிருந்து தூக்கியெறியப்பட்டார்கள். சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு காரணமாக, அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகள் சிதறின. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 

உள்ளூர் நேரப்படி, காலை 8.25 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. ஏராளமான கார்கள் தீயில் கருகிவிட்டன. ஜெர்மன் தூதரகத்தை ஒட்டி இந்தத் தாக்குதல் நடந்ததாக உள்ளூர் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால். இலக்கு யார் என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.

அங்கு அதிபர் மாளிகை, மற்றும் இந்திய, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. லாரியிலோ அல்லது தண்ணீர் டாங்கிலோ குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆனால், அவ்வளவு பாதுகாப்பு மிக்க பகுதியில் எப்படி தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற கேள்வி எழக்கூடும். 10 அடி உயரத்துக்கு, குண்டுவெடிப்பைத் தாங்கும் சக்தி வாய்ந்த சுவர்கள் அமைக்கப்பட்ட அந்தப் பகுதி தலைநகரில் மிகவும் பாதுகாப்பான பகுதியாகக் கருதப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

`இன்னும் காயமடைந்தவர்களையும், உயிரிழந்தோரின் சடலங்களையும் கொண்டுவந்தவாறு இருக்கிறார்கள்' என போலீஸ் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் கவூஸி தெரிவித்தார்.

இந்திய தூதரக ஊழியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். பிரான்ஸ் தூதரகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், ஆனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் சிலர் ஒரு மொபைல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் டோலோ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

காபூலில் சமீப மாதங்களில், அடிக்கடி பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு நிரவரம் மோசமடைந்து வருகின்றன என்பதையே இது காட்டுகிறது.