இது நடந்தால் மஹிந்த அவுட்2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தபோதிலும் அவருக்கு இன்னும் கணிசமான அளவு மக்கள் செல்வாக்கு இருக்கவே செய்கின்றது.இதை நிரூபிப்பதற்காகவே மஹிந்த அணியினர் ரொம்ப சிரமப்பட்டு கடந்த மே தினக் கூட்டத்துக்கு அதிகமான மக்களை அழைத்துச் சென்றனர் .
அந்த மக்கள் அலையைப் பார்த்து ஐக்கிய தேசிய கட்சியினர் சற்று கலங்கித்தான் போயினர்.ஆனால்,பிரதமர் ரணிலோ சற்றும் அசராமல் உள்ளாராம்.
சத்தமின்றி இராஜதந்திரரீதியில் மஹிந்தவின் செல்வாக்கைத் துடைத்து வீசுவதற்கு அவர் எப்போதோ திட்டமிட்டு செயற்படத் தொடங்கியுள்ளமையே இந்த நிதானத்துக்குக் காரணம் என அறிய முடிகிறது .
தென் கரையோர மாவட்டங்களில் மஹிந்தவுக்கு இருக்கின்ற செல்வாக்கை அழித்தால் போதும்.ஏனைய மாவட்டங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலானது அல்ல என்று ரணில் கருதுகிறார்.அதற்கு அவர் வகுத்த திட்டம்தான் ஹம்பாந்தோட்டை சுதந்திர வர்த்தக வலயம்.
இந்த வர்த்தக வலயத்திற்குள் 20 தொழில்சாலைகளை அமைத்து தென் கரையோர மாவட்டங்களுக்கு மாத்திரம் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு ரணில் திட்டமிட்டுள்ளார்.தனது திட்டம் வெளிப்படுத்தப்பட்டால் இதை மஹிந்த அணியினர் குழப்பிவிடுவர் என்று அஞ்சியே அவர் அமைதியாக வேலையை செய்து வருகிறாராம்.
இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இதைப் பூரணப்படுத்தும் திட்டம் ரணிலிடம் உள்ளதாம்.அப்படி நடந்தால் மஹிந்தவின் கதை அவ்வளவுதான் என்கிறது பிரதமரைச் சுற்றியுள்ள வட்டாரம்.
[எம்.ஐ.முபாறக்]