வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மாற்று வழிகள் ஏராளம் ; அமைச்சர் றிஷாட்


அரசாங்க தொழில் தான் தேவை என்று படித்தவர்கள் அடம்பிடிப்பதனால் தான் இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு தூரம் தலைவிரித்தாடுவதற்கு காரணம் என கைத்தொழில் வர்த்தத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு  நிதியுதவி வழங்கும் நிகழ்வு அமைச்சின் கேற்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச்சபை,சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களுடன் தனித்தனிஒப்பந்தங்களை மேற்கொண்டு இந்த உதவு தொகையை வழங்கியது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் கூறியதாவது.

பரீட்சையில் சித்தி பெற்றவர்களினதும், பட்டதாரிகளினதும்.எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரிக்கும் அளவிற்கு அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காத ஒரு துர்ப்பாக்கிய நிலையை நம் நாட்டில் காண்கின்றோம்.இதற்கு பிரதான காரணம் அரசாங்க தொழில் மட்டுமே நம்மவர்கள் நாட்டம் காட்டுவதே. ஓய்வூதியத்தை மையமாக கொண்டே அனேகர் அரசாங்க தொழிலுக்கு முயற்சி செய்கின்றனர்.

இது ஒரு வகையில் சோம்பேறியாக இருந்து பென்சன் பணத்தில் வாழ முடியும் என்ற பிழையான எண்ணமே. குறைந்த வேதனம் என்றாலும் அரசாங்க தொழிலை நம்பி இருக்கும் இவர்கள் கொழுத்த சம்பளத்தில் தனியார் துறையினர் வழங்கும் கெளரவமான தொழில்களில் கூட நாட்டம் காட்டுவதில்லை.

நமது நாட்டில் தனியார் துறையிலும் சுயதொழில் முயற்சியிலும் குறைந்த வீதத்தினரே ஆர்வம் காட்டுகின்றனர். அதனாலேயே அவர்கள் வாழ்க்கை வசதிகளுடன் நிம்மதியாக வாழ்வதை காண்கின்றோம். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இவர்களிடம் இருப்பதால் சமூகத்திலே செல்வச் செழிப்புள்ளவர்களாக இவர்கள் மாறுகின்றனர்.

அரச தொழில் கிடைத்தால் காலை எட்டு மணிக்கு அலுவலகத்திற்கு சென்று மாலை வேளையில் வீடு வந்து சேர்ந்து நிம்மதியாக இருக்கலாம் என்ற மனோபாவம் பலரிடம் இருக்கின்றது.  இவர்கள் அந்த தொழிலுடன் மட்டும் தமது வாழ்க்கையை மட்டுப்படுத்திகொள்வதால் எதிர்காலம் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்கவேண்டி நேரிடுகின்றது.

கைத்தொழில் அபிவிருத்தி சபை இவ்வாறான உற்பத்தி  முயற்சிகளுக்கு உதவுவதும் அவர்களை ஊக்கப்படுத்துவதும் சிறந்த விடயமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஊடகப்பிரிவு..