வரம்பு மீறும் ஞானசாரரை நல்லாட்சியால் கட்டுப்படுத்த முடியாதென்பது வெறும் பூச்சாண்டிஞானசார தேரரின் கொட்டத்தை அடக்கமுடியாத அரசு எவ்வாறு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது..

இன்று ஞானசார தேரர் பௌத்த மத போதனைகளுக்கு அப்பால் சென்று  இஸ்லாத்தை இழிவுபடுத்திவருகிறார். அப்போது மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் மௌனிகளாக இருந்த எமது முஸ்லிம் அமைச்சர்கள் இன்றும் அமைச்சு கதிரைகளை அலங்கரித்த வண்ணம் மௌனமாக உள்ளனர்.

முஸ்லிம்களின் பாரிய பங்களிப்பில் ஆட்சிக்கு வந்த அரசில் இருந்து வெளியேற வேண்டும் என நாம் கூறவில்லை.அரசாங்கத்திற்க்குள் இருந்துகொண்டு அரசுக்கு கடும் அழுத்தங்களை கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம்.முதல்கட்டமாக அரசாங்கத்தின் நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்து அதனை அரசாங்கத்துக்கு அறியப்படுத்துமாறே நாம் கோரிக்கை முன்வைக்கிறோம்.

இன்று மகிந்த ஆட்சிகாலத்தில் இல்லாத அளவு ஞானசார தேரர் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்துவெளியிட்டு வருகிறார்.

ஆனால்,ஞானசார தேரர் நல்லாட்சியாளர்களின் பங்காளி  தனக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி ஏற்கனவே கூறிவிட்டார்.முடியுமானால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி சவால் விட்டுள்ளார்.அவ்வாறு இருந்தும் அவரது சவாலை நல்லாட்சி ஏற்கவில்லை.பட்டப்பகலில் நீதிமன்ற உத்தரவை கிழித்து வீசிய ஞானசாரரை கைது செய்யவில்லை.அலுத்கமை கலவரத்தை காட்டி ஆட்சி பீடம் ஏறிய நல்லாட்சி இழப்பீட்டை மட்டுமல்ல நீதியை கூட பெற்றுக்கொடுக்கவில்லை.

இனிமேலும் ஞானசார தேரர் மஹிந்தவின் ஆள் என சித்தரித்து முஸ்லிம்களை வைத்து அரசியல் இலாபம் தேட ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்க கூடாது. மஹிந்த ஆட்சியை கவிழ்க்க மேற்குலகம் ஏவி விட்ட முகவரே இந்த ஞானசார தேரர் என்பதை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஞானசாரவை வைத்து முஸ்லிம்களை உசுப்பேற்றிவிட்டு ஆட்சியை கவிழ்த்த நல்லாட்சியின் பங்காளிகளான  மேற்குலகம் மீண்டும் ஞானசாரவை வைத்து முஸ்லிம்களை உசுப்பேற்றி ஏதோ காரியம் சாதிக்க திட்டம்போடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.