வடகிழக்கு இணைக்கப்பட்டால்தான் முஸ்லிம்களுக்கு விடிவுகாலம்; பஹத் ஏ.மஜீத்



இலங்கை திருநாட்டின் பூர்வீக குடிகளான இலங்கை சோனகர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் கலாச்சாரத்தாலும் மொழியாலும் காலங்காலமாக ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தமிர்களும் சோனகர்களும் அதிகம் செறிந்துவாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிந்திருப்பது வரலாற்று பிழையாகவே இருக்கும் என சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தோழர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார். 

நாங்கள் என்ன தவறு செய்தோம் ஆவணப்படத்தின் அறிமுக சந்திப்பு நேற்று இரவு ஆலயடிவேம்பு இளைஞர்கள் நலன்புரி அலுவலகத்தில் இடம்பெற்றது, ஆவணப்படத்தின் இயக்குனரும் சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான தோழர் பஹத் ஏ.மஜீத்  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய தோழர் பஹத் ஏ.மஜீத்,

வடகிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக பூமி, தமிழர்கள் என்பவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்த நாட்டில் முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் பிரதான மொழியாக தமிழையே பேசுகின்றனர் ஆக ஒரு அடையாளமாக காணப்படுவது மொழி அந்த மொழியை உச்சரிக்கின்ற இரு இனத்தாரும் ஒரே குடையின் கீழ் இணைந்து செயற்படவேண்டும். கசப்பான சம்பவங்களை மறந்து இனிவரும் காலத்தில் சமாதானமாக செயற்படல் வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆரம்பித்தில் அதாவது தொடக்கத்தில் ஆயுதப்பயிற்சி கொடுத்தவர்கள் முஸ்லிம்கள், இடம் கொடுத்து மறைத்துவைத்தர்கள் முஸ்லிம்கள் தொடர்புகளை பேணியவர்கள் முஸ்லிம் இப்படி இருந்ததுதான் வரலாறு, விடுதலை இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வடகிழக்கில் பிட்டும் தேங்காய்பூவும் போல இருந்த வரலாறு இருக்கிறது. சிங்கள இனவாதிகளால் எப்போது நசுக்கப்பட திட்டம் தீட்டப்பட்டதோ அன்று தொடக்கம் இரு இனங்களுக்குள்ளும் பிரச்சினை தோன்றியது. இரு இனங்களும் தங்களை தாங்கள் காப்பாற்றிக்கொள்ள  எத்தனித்தனர் இறுதியில் இருவரும் பிரிந்தனர்.

ஆனால் காலங்கள் கடந்து இன்று நல்லாட்சி அரசு மலர்ந்துள்ளது, இந்த அரசிலாவது இரு இனங்களும் அரசியல் மற்றும் காலாச்சார ரீதியில் இணைய வேண்டும் அதற்கான காலம் கனிந்துள்ளது. முஸ்லிம் முதலமைச்சரை தெரிவு செய்ய தமிழ் தலைமை விரும்பியது ஆனால் முஸ்லிம் தலைமைகள் இன்று அவர்களை ஏமாற்றிவிட்டதாக அவர்கள் பகிரங்கமாக பேசுகின்றனர். இன்று கூட்டமைப்பு எதிர்கட்சி தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது இதில் எங்கள் குரல்கள் ஓங்க வேண்டும் நாங்கள் பறிகொடுத்த நிலங்கள் மீளப்பெற வேண்டும். எமது பள்ளிவாசல்கள் தாக்கப்படக்கூடாது, எமது நிலங்களில் விகாரை அமைக்க கூடாது. இதேகோரிக்கைதான் கூட்டமைப்பின் கோரிக்கையும் இதில் இருவரும் ஒன்றுபடுவதே இலகு.

வடகிழக்கு இணைவதில் சந்தோசமே, ஆனால் அந்த இணைவில் முஸ்லிம்களுக்கான சரியான தீர்வு திட்டம் அவசியம் அது பற்றி அதிகம் கரிசனை கொள்ளவேண்டும். என்றார்.