நாட்டின் யாப்பில் சமவுரிமை பேணப்பட்டாலே இலங்கையிலுள்ள சிறுபான்மையினருக்கு விடுதலை கிடைக்கும்

நாட்டில் அண்மைக்காலமாக பௌத்த இனவாத கும்பல்களில் ஒன்றான பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரோர் சிறுபான்மையினரை நோக்கி நிந்திக்கும் செயல்பாடு குறித்து முஸ்லிம் சமூகம் கவலை அடைந்திருப்பதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், குழுத்தலைவருமான ஆர்.எம். அன்வர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 71வது சபை அமர்வு (23.05.2017) சபைத் தவிசாளர் கலபதி சந்திரதாஸ தலைமையில் இடம்பெற்றது. முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அநீதிகள் தொடர்பிலான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆர்.எம். அன்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து சபை அமர்வில் உரையாற்றுகையில்...

அண்மைக்காலமாக முஸ்லிம்களின் மதஸ்தலங்கள் மற்றும் கலாச்சாரம் மீதான தலையீடு முஸ்லிம்களின் இறைவனான அல்லாஹ்வை கீழ்த்தரமாக நிந்திப்பது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமும் பராமுகமாக இருப்பது குறித்தும் சிறுபான்மை மக்கள் கடந்த ஆட்சியை எதிர்த்து நல்லாட்சியை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலே கொண்டு வந்தவர்கள் இன்று ஏமாற்றப்பட்டவர்களாக இருக்கின்றனர்.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் நாட்டின் சட்டம் ஒழுங்கு, அரசியல், நிர்வாகம், மத கலாச்சாரம், வெளிவிவகாரம் போன்றவற்றில் தலையிடுவது நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியை போன்றே செயல்படுகிறார் குறித்த செயற்பாட்டினூடாக நாட்டிலே இனமுருகளை ஏற்படுத்தும் ஞானசாரர் மீது நல்லாட்சி அரசு சட்டத்தை அமுல்படுத்தாதது குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்த நாட்டில் யாப்பில் மாற்றம் செய்யப்பட்டு சிறுபான்மை மக்களுக்கும் சம உரிமை பேணப்பட்டாலே நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழமுடியும் இனவாத செயற்பாடு குறித்து செயற்படாத நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் எவ்வாறு சிறுபான்மை மக்களின் அதிகாரப்பகிர்வு, நல்லிணக்கம் என்பவற்றை பெற்றுத்தருவார்கள் என எவ்வாரு எதிர்பார்க்க முடியும் வெறுமனே மக்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில் இந்த அரசு கபட நாடகம் ஆடுகிறதா என்று தோணுகிறது. 

கடந்த ஒரு வாரத்திற்குள் மாத்திரம் பல சம்பவங்கள் பதிவாகிய நிலையில் குருணாகல் ஹவத்தை ஜும்மா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டு தாக்குதல், மகரகமையில் முஸ்லிம் வர்தகருக்கு சொந்தமான மரக்கடை தீக்கிரை, அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இருந்த முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான தேநீர் கடை சேதமாக்கப்பட்டது இவ்வாறு பல சமப்வங்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது.  

எனவே நல்லாட்சி அரசாங்கமானது சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டி குற்றவாளியை கூண்டின்முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் மனோகணேசன் அவர்களின் அமைச்சிற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்ததை போன்று கிழக்கு மாகாண  சபைக்குள்ளும் அவர்கள் வரமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது எனவும் அன்வர் கேள்வி எழுப்பினார். 

ஆகவே இந்த சபையினூடாக ஜானதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சபையில் கேட்டுக்கொண்டார்.