சிங்கள - முஸ்லிம் மோதலை ஏற்படுத்த சூழ்ச்சி என்கிறார் ஏ.எல்.எம் அதாஉல்லா


சிங்கள - முஸ்லிம் மோதல் ஒன்றை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் செயற்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.
மல்வத்து மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரை சந்தித்த பின்னர் கண்டியில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே முன்னாள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுகிறது. ஏழை முஸ்லிம் மக்களின் வீடுகள் உடைக்கப்படுகின்றன. இதற்கு முன்னரும் இப்படியான சம்பவங்கள் நடந்துள்ளன.
சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பகையை ஏற்படுத்தி, சிங்கள மக்களுடன் வாழ்வதை விட தமிழ் மக்களுடன் வாழ்வது சிறந்தது என நிலைமையை உருவாக்கி, வடக்கு, .கிழக்கை இணைக்கும் சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கம் ஒன்றை மாற்ற சிங்கள, முஸ்லிம் மோதலை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் செயற்பாடுகள் சம்பந்தமாக மாநாயக்க தேரருக்கு தெளிவுப்படுத்தினேன்.
ஞானசார தேரர் எந்த உடன்பாட்டின் அடிப்படையில் இவற்றை செய்கின்றார் என்பது எனக்கு தெரியாது. அவர் அல்லாஹ் மற்றும் நபியை விமர்சித்து வருகிறார்.
இவ்வாறு சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு ஞானசார தேரருக்கு செயற்பட முடியாது என முன்னாள் அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கலகொட அத்தே ஞானசார தேரர் அண்மையில் , தேசிய சகவாழ்வு, உரையாடல் மற்றும் அரச மொழிகள் அமைச்சுக்கு சென்று, அமைச்சர் மனோ கணேசனுடன் விவாதம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டார்.
இது குறித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மனோ கணேசன்,
பௌத்த பிக்கு என்ற வகையில் பொறுமை, கருணை, தயவு ஆகியவற்றை கைவிட்டு தனது அமைச்சுக்குள் பிரவேசித்து நடந்து கொண்டதாகவும் எனினும் தான் பௌத்த மதத்தை சேர்ந்தவன் இல்லை என்ற போதிலும் பௌத்தனாக நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.