ஞானசார தேரரை கைது செய்ய அரசு தயக்கம் காட்டுவதேன்?சுஐப் எம் காசிம்

அல்லாஹ்வையும் முஸ்லிம்களையும் தொடர்ச்சியாக, மோசமாக கேவலப்படுத்தி வரும் ஞானசார தேரர் நேற்று முன் தினம் (19) ஆம் திகதி பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, அவருக்கெதிராக முறைப்பாடு இருந்தும், அவரைக் கைது செய்யாமல் விட்டு விட்டு நேற்று மாலை (20) குருநாகல் பகுதியில் அவரை கைது செய்ய எய்ப்புக்காட்டிய பொலிஸாரின் நாடகம் குறித்து அமைச்சர் ரிஷாட் தனது விசனத்தை பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரின் முஸ்லிம்கள் தொடர்பான நடவடிக்கைகள் எல்லை மீறி இருப்பதை பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் காட்டமாக தெரிவித்திருந்ததுடன் அவரைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை செய்திருந்தோம். இதுவரை அது நடக்கவில்லை. ஆனால் அவரைக் கைது செய்வது போன்ற ஒரு திட்டமிட்ட நாடகம் தான் அரங்கேற்றப்பட்டுள்ளது. சட்டத்தைக் கையிலெடுத்து ஆடும் இந்தத் தேரரை அரசாங்கம் அடக்குவதற்கு ஏன் அஞ்சுகிறதோ தெரியவில்லை?

சிறுபான்மை மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை அச்சுறுத்தி எந்தவிதப் பயமும் இல்லாமல் அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.

இன்று (21) காலை தர்ஹா டவுன் வீதி வழியாக ஊர்வலம் சென்ற, பொது பல சேனா இயக்கத்திற்கு அழுத்கம பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். பொலிஸாரின் கபடத்தனம் இந்தச் செயலில் இருந்து நன்கு புரிகின்றது.

ஞானசார தேரரையும் அவரது இயக்கத்தையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டு பொலிஸார் தமது பணிகளை முன்னெடுக்கின்றனரே ஒழிய முஸ்லிம்களின் அச்சத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை.

புனித ரமழான் நெருங்க நெருங்க முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. கடந்த வாரம் முஸ்லிம் சமூகத்தின் மீதும் பள்ளிவாசல்கள் மீதும் மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நேற்று மாலை 20 ஆம் திகதி மல்லவப்பிட்டியில் பள்ளிவாசலுக்கு குண்டுகள் வீசி சேதப்படுத்தியுள்ளனர். இன்று (21) காலை எல்பிட்டியில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான வியாபாரத்தளமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சட்டமும் ஒழுங்கும் செத்துக்கிடப்பதாகவே நாங்கள் கருதுகின்றோம். எனவே இனவாதத்தின் ஊற்றுக்கண்ணான ஞானசாரதேரரை உடன் கைது செய்ய வேண்டுமென  இந்த அரசின் பங்காளிக் கட்சியென்ற வகையிலும் அமைச்சர் என்ற வகையிலும் பொறுப்புடன் கோரிக்கை விடுக்கின்றேன் இவ்வாறு பிரதமரிடம் முறையிட்டுள்ளார்.