திரிபோசா வாங்கச் சென்ற தாய் மற்றும் சிசு சடலமாக மீட்பு


திரிபோசா வாங்கச்சென்ற தாயும், குழந்தையும் காணவில்லையென உறவினர்களினால் நேற்று மாலை நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் சடலம், இன்று லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நேற்று காலை 10 மணியளிவில் தெப்பட்டன் தோட்டத்திலிருந்து, தனது இரண்டு மாத ஆண் குழந்தையுடன் திரிபோச வாங்குவதற்கு கொத்தலனை சனசமூக நிலையத்திற்கு சென்ற தாய், நேற்று மாலை வரை வீடு திரும்பவில்லையென உறவினர்களினால் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கணவர் கொழும்பில் பணிபுரிவதாகவும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதுடைய செல்வராஜ் சுசீலா என்பவரே குழந்தையுடன் காணவில்லையென குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதேச மக்களும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது, லக்ஷபான நீர்வீழ்ச்சி பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் சிசுவின் சடலத்தை மீட்ட பொலிஸார் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தாயை தேடும் நடவடிக்கையை தொடர்ந்த நிலையில் நீர்வீழ்ச்சி பகுதியில் தாயின் சடலத்தை இனங்கண்டுள்ளதாகவும், சடலத்தை மீட்கும் பணி தொடர்வதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.