தாழமுக்கம் ‘மோரா’ சூறாவளியாக மாறியுள்ளதுகடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் உருவாகியிருந்த தாழமுக்கமானது தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு தாய்லாந்து ‘மோரா’என்னும் பெயர் சூட்டியுள்ளது.

இந்த மோரா சூறாவளியானது தற்போது இந்தியாவின் கல்கத்தா நகரிலிருந்து தெற்கு,தென்கிழக்காக 720 கிலோ மீற்றர் தூரத்திலும், பங்களாதேஸின் சிட்டாகொங் நகரத்திலிருந்து 630 கிலோமீற்றர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தின் அதிகாரி க.சூரியகுமாரன் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
இந்த சூறாவளி மணிக்கு 12 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்வதாகவும்,இது மேலும் வலுவடைந்து பங்களாதேஸின் கரையோரத்தை நாளைய தினம் ஊடறுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் இலங்கையின் சில பகுதிகளில் மேகமூட்டம் காணப்படுவதுடன்,இடைக்கிடை சற்றுப்பலமாக வீசக்கூட என்றும், முக்கியமாக மத்திய மலைப்பிரதேசத்தின் மேற்கு சரிவுகளிலும்,இலங்கைத் தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலயத்திற்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூட என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கு,சப்ரகமுவ,தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.