நிவாரணப் பணிகளில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் களத்தில்வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்தின் போர்வை, அக்குறஸ்ஸ, கொடபிட்டிய பகுதிகளில் நிவாரணம், சுத்திகரிப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் களமிறங்கியுள்ளது. 

மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவின் கோரிக்கைக்கு அமைய, ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இப்பணிகளுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். 

இதற்கமைய, வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள பகுதிகளில் உள்ள  குடிநீர் கிணறுகளை சுத்திகரிப்பதற்கு அதற்குத் தேவையான பொருட்களுடன் குழுவொன்றினை ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் இன்று திங்கட்கிழமை மாத்தறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இக்குழுவினை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழியனுப்பி வைத்தார். 

அத்துடன், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உலர் உணவினை தயாரிப்பதற்கான ஏற்பாடுகளையும் அது செய்துள்ளது. 

இதேவேளை, நாளை மறுநாள் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ள இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அங்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவும் உள்ளார். 

R.Hassan