May 1, 2017

ஞானம் பிறக்காதவர்கள்
அரச மரத்தின் கீழ், கௌதம புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக சரித்திரக் குறிப்புக்களின் ஊடாக நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். துன்பத்திற்கு காரணம் ஆசை என்ற மாபெரும் தத்துவத்தை சென்னவர் புத்தர். நல்ல நம்பிக்கை, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்சாட்சி, நல்ல தியானம் போன்ற எண்வகை வழிமுறைகளையும் போதித்தவர். அவர் உன்னதமானவர். அவரது போதனைகள் எல்லா சமூகங்களுக்கும் பொருத்தமானவை.

அவர் அருளிய முக்கியமான நல்லொழுக்க போதனைகளுள் மற்றைய உயரினங்களுக்கு துன்பம் விளைவிப்பதையும் அதேபோன்று பிறர் பொருளை கவர்வதையும் தவிர்க்குமாறு தம்மை பின்பற்றுவோருக்கு உபதேசித்தார். இலங்கையில் அவரைப் பின்பற்றுகின்ற இலட்சக்கணக்கான மக்கள் இதை உணர்ந்து செயற்படுகின்ற போதும் புத்தரின் போதனைகளை கற்றவர்கள் என்று சொல்கின்ற ஒரு சில காவியுடைதாரிகளுக்கும் பௌத்தத்தை வளர்க்கப் போகின்றோம் எனக் கூறும் சில தீவிர செயற்பாட்டாளர்களுக்கும் இன்னும் அடிப்படையான ஞானம் கூட கிடைக்கவில்லை என்றே நாம் கருத வேண்டியிருக்கின்றது.

புத்தர் மட்டுமல்ல, உலகில் வழிகாட்டியாக வந்த எந்தவொரு புனிதரும் காட்டிச் சென்ற வழிமுறைகள், போதனைகள் அவர் சார்ந்த மதக் குழுமங்களில் வாழும் ஒரு தரப்பினரால் சரியாக பின்பற்றப்படாமையின் காரணத்தினாலேயே இன்று உலகில் இத்தனை அழிவுகளும் குழப்பங்களும் உயிர்பலிகளும் வஞ்சகம் தீர்த்தலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கையில் 1950களில் இருந்து இன்று மாணிக்கமடு புத்தர் சிலை வரை இடம்பெற்று வருகின்ற இனவாத செயற்பாடுகள் எல்லாம் இவ்விதம் தோற்றம் பெற்றவையே என்றும் கூறலாம்.

இனவாத சரித்திரம்

பல்லின பரம்பலைக் கொண்ட ஒரு நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்திற்கு எப்போதும் ஒரு வகை கர்வமும் தலைக்கனமும் நாம்தான் பெரியவர்கள் என்ற இறுமாப்பும் இருக்கவே செய்யும். ஒரு ஓட்டப் பந்தயத்தில் இரண்டாமிடத்தில் ஓடுபவனுக்கு இருக்கின்ற டென்சனை விட முதலாவதாக ஓடிக் கொண்டிருப்பவனுக்கு அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற டென்சன் அதிகமாக இருக்கும். பின்னால் வருகின்றவர்களின் நகர்வுகளை பார்த்துப் பார்த்தே எட்டுக்களை எடுத்து வைக்க வேண்டியிருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

ஆனால், இலங்கையில் சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள கடும்போக்குவாதமாக இனவாதமாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றது. இது இன்று நேற்று நடந்ததல்ல. ஐம்பது வருடங்களுக்கு முன்னரே நடந்து விட்;டது. இதற்கு பல காரணங்கள் இருந்தன. இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தனிச் சிங்கள சட்டம் உருவாவதற்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு இனரீதியாக ஒடுக்க முற்பட்டதன் விளைவே மாபெரும் இனப் பிரச்சினையும் யுத்தமும் ஆகும். இலங்கையில் அப்போதிருந்த கொள்கை வகுப்பாளர்கள் ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால் இந்த இனமுறுகலை அப்போதே முளையில் கிள்ளி எறிந்திருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள் அபிப்பிராயப்படுகின்றார்கள். ஆனால் அரசியல் செய்வதற்கும் வேறு பல காரியங்களுக்கும் ஏதாவது ஒரு காரணம் தேவைப்பட்டது. இனப்பாகுபாடு அங்கிருந்தே ஆரம்பமாகியது. பல இனமுறுகல்களுக்கு இந்த மனோநிலையும் முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். இனத்துவ அடக்குமுறையை பிரயோகித்து, தமிழர்கள் என்ற பந்தை நீருக்குள் அமிழ்த்தினார்கள். அது மேலே வேகமாக திரும்பிவந்த போது யுத்தம் வெடித்தது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் சிங்கள கடும்போக்கு சக்திகளுக்கு அரசியல் செய்வதற்கும் பிழைப்பு நடாத்துவதற்கும் கையில் எதுவும் இருக்கவில்லை.
‘தமிழர்களை அடக்கி விட்டோம். இனி அவர்கள் வாலாட்ட மாட்டார்கள். ஆனால் இந்த முஸ்லிம்கள் செழிப்பாக இருக்கின்றார்களே, அவர்களை கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவந்தால் என்ன’ என்பது போன்ற ஒருவித குதர்க்கமான சிந்தனையால் இனவாதத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பமானது என்று சொன்னால் மிகையில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளும் இலங்கையில் அரசியல், இராணுவ, புவியியல் நலன்களை கொண்டிருக்கின்ற வெளிநாட்டு தரப்பினரும் இனவாதத்தை ஊதிப் பெருப்பிப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றார்கள் என்பது வெறும் அனுமானமல்ல.

இரண்டாம் பாகம்

மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் நாட்டில் இனவாதிகள் உச்சாணிக் கொம்பில் நின்றார்கள். ஏன் எதுக்கென்று காரணங்கள் எதுவுமின்றி, முஸ்லிம்களின் இன, மத தனித்துவங்கள் பறித்தெடுக்கப்பட்டன. ஹலால் சான்றிதழ், அபாயா, பள்ளிவாசல்கள் என்று பல விடயங்கள் இலக்குவைக்கப்பட்டன.

இன்னுமொரு தடவை ஆட்சிபீடமேறுவதற்கு அவாக் கொண்டிருந்த மஹிந்த ஆட்சியும் இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோத்தபாய பொது பலசேனா போன்ற அமைப்புக்களுக்குப் பக்கபலமாக இருப்பதாகவும் அடுத்த தடவை ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் கடும்போக்கு சிந்தனை கொண்ட வாக்காளர்களை தம்வசப்படுத்தும் கருவியாக இனவாதத்தை அவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்றும் அப்போது கூறப்பட்டது. இன்றைய நல்லாட்சியிலும் அதே வீச்சோடு இனவாதிகள் செயற்படுவதைப் பார்த்து, மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தாலும், மஹிந்தவின் ஆட்சி முறை இனவாதத்திற்கு சாமரம் வீசுவதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
இப்போது ஆட்சி மாற்றப்பட்டு விட்டது.

அளுத்கமை கலவரத்தை பிரதான காரணமாகக் கொண்டே முஸ்லிம்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான தந்திரோபாய திட்டம் தம்புள்ளை பள்ளி விவகாரத்தில் இருந்தே ஆரம்பமாகிவிட்டது என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாகும். இவ்வாறு ஆட்சி மாறிய சில மாதங்களில் இருந்தே, இனவாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக அடக்கு முறைகளைப் பிரயோகித்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் இன ரீதியான, மத ரீதியான தனித்துவ அடையாளங்களை கேள்விக்குள்ளாக்கல், சிறுபான்மை மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களை பௌத்த மதத்தின் பெயரால் ஆக்கிரமித்தல், தமிழ் முஸ்லிம்களின் காணிகளை பல வியூகங்களின் மூலம் சிங்களவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல், இது சிங்கள நாடு மற்றெல்லாரும் வந்தேறு குடிகள் என்ற கருத்தியலை விதைத்தல் என கடும்போக்கு சிந்தனைகள் நன்றாக கட்டமைக்கப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் புதிய அத்தியாயமே அம்பாறை மாவட்டம் மாணிக்கமடு பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர்சிலையும் அதற்கருகில் விகாரை அமைக்கும் முயற்சிகளும் ஆகும்.

தனியே புத்தர்

அம்பாறை மாவட்டம் மாணிக்கமடு கிராமத்தில் 101 தமிழ் குடும்பங்கள் வசிக்கின்றன. இதற்கருகே பல முஸ்லிம் கிராமங்கள் உள்ளன. மாணிக்கமடுவில் இருந்து நான்கைந்து கிலோமீற்றர்கள் தொலைவில் தீக்கவாபி விகாரையும் அதைச் சூழ புனிதபூமியும் உள்ளது. ஆயினும், மாணிக்கமடுவில் ஒரு சிங்களக் குடும்பமேனும் நிரந்தரமாக வசிக்கவில்லை.

 அதுமட்டுமன்றி,மாணிக்கடு என்பது இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குள் உள்ளடங்குவதுடன், தீகவாபி என்ற பிரதேசம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவின் 01ஆம்,2ஆம் கிராம சேவகர்கள் பிரிவுகளாக உள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 29ஆம் திகதியன்று அதாவது தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயம் திடீரென அங்கு வந்த சில பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய ஒரு குழுவினர் ஐந்தடி உயரமான ஒரு புத்தர் சிலையை இங்குள்ள மாயக்கல்லி மலையில் வைத்துவிட்டுச் சென்றனர். இதனால் இப்பிரதேசத்தில் பாரிய களேபரம் ஏற்பட்டது.


இந்த மலையில் ஒரு சிறிய வழிபாட்டு தலத்தை அமைப்பதற்கு அங்குள்ள தமிழ் மக்கள் முன்னர் எண்ணியிருந்த போதும், இன ஐக்கியத்தை கருதி அதைக் கைவிட்டிருந்தனர். ஆனால் இன ஒற்றுமை பற்றிய எந்த பிரக்ஞையும் இன்றி கடும்போக்காளர்கள் புத்தர் சிலையை நிறுவி விட்டுப் போனமை துரதிர்ஷ்டவசமானது.

இவ்விவகாரம் இப்பிரதேசத்தில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்தது. தமிழ், முஸ்லிம் மக்களும் ஒரு சில அரசியல்வாதிகளும் களத்தில் இனவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். பொலிஸாரின் தலையீட்டுடன் இவ்விடயம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பல உயர்மட்ட கூட்டங்களும் இடம்பெற்றன. ஆனால், இனவாதிகள் ஒற்றைக்காலில் நின்றனர். இது சிங்கள நாடு என்றனர். தொல்பொருள் திணைக்களத்திற்குரிய மலையில் சிலை வைப்பதற்கு எங்களுக்கு அதிகாரமுள்ளது என்ற தொனியில் பேசினர்.

ஆனால்,தீகவாபிக்கு செல்லும் பக்தர்கள் தரித்துச் செல்வதற்கான ஒரு இடமாகவே இது இருக்கும் இங்கு பெரிய விகாரை எதுவும் கட்ட மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். இவ்விடயம் சில வாரங்கள் இழுபறியாக இருந்தது. பிறகு முஸ்லிம்களும் அரசியல்வாதிகளும் ஏனைய விடயங்களைப் போலவே இதனையும் மறந்து விட்டனர். அதன் பிற்பாடு, மாயக்கல்லி மலையில் புத்தர் தனித்து விடப்பட்டிருந்தார்.

மலையடிவாரத்தில் இருந்து 50 – 60 அடி தூரத்தில் இருக்கும் தமிழ் வீடுகளை நோக்கியவாறு அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இவ்விவகாரம் சற்று ஓய்ந்திருந்த நிலையில், கடந்த வாரம் அங்குவந்த இன்னுமொரு குழுவினர் மலையடிவாரத்தில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இங்கு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமே காணிகள் உள்ளன. சிங்களவர்களுக்கு அவ்விடத்தில் இல்லை. இவ்வாறிருக்கையில் முஸ்லிம்கள் இருவருக்கு சொந்தமான காணிக்குள் அத்துமீறி பௌத்த விகாரை நிர்மாணிக்க முனைந்ததால் சிறுபான்மை மக்கள் ஆத்திரமுற்றனர்.

அதாவது, மாயக்கல்லி மலையைச் சுற்றிலுமான வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை மேற்கொள்ள இனவாதிகள் வந்திருந்தனர். ஆனால் முஸ்லிம்களும் தமிழர்களும் விடவில்லை. இதனால் முறுகல்நிலை ஏற்பட்டது. பொலிஸார் வந்தனர். இவ்விடயம் அரச நிர்வாக உயர்மட்டத்தினர் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. பல கூட்டங்கள் இடம்பெற்றன.

ஞானசாரர் வருகை

இதற்கிடையில், இலங்கையில் நவீன இனவாதத்தை முன்னின்று மேற்கொள்பவரான பொது பலசேனா அமைப்பின் கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த சில தினங்களுக்கு முன் இவ்விடத்திற்கு தனது சகாக்களுடன் வந்துள்ளார். இதுவரை காலமும் சாதரணமான பிக்குகளும் அரச அதிகாரிகளும் இவ்விடயத்தை கையாண்டு வந்த நிலையில், முஸ்லிம்களால் கடும் மோசமான கடும்போக்காளராக நோக்கப்படுகின்ற ஞானசார தேரர் இவ்விடயத்தில் உள்நுழைந்திருக்கின்றமை பல்வேறு அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஞானசார தேரர் ஒரு விடயத்தில் மூக்கை நுழைத்தால் என்னநடக்கும், அதன் நோக்கம் என்னவாக இருக்கும், அது எங்கே போய் நிற்கும் என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் நன்றாக பட்டிறிந்து இருக்கின்றார்கள். அவர் மாயக்கல்லி மலை விவகாரத்திற்குள் வந்திருப்பதே, இது வெறுமனே விகாரை அமைக்கும் நடவடிக்கை மட்டுமல்ல அதையும் தாண்டிய ஒரு நிகழ்ச்சிநிரல் இருக்கின்றது என்பதை சொல்வதற்கு போதுமானதாகும்.

எனவே முஸ்லிம் மக்கள் இதுவிடயத்தில் கூடிய கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் முஸ்லிம் தலைமைகள் தங்களுடைய அதிகாரம் இருந்தும் அதிகாரம் இல்லாத அரசியல் வறுமையையும் சுரணையில்லா தனத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

மாயக்கல்லி மலை விவகாரத்திற்கு தீர்வு காண்பதில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. அக்கட்சி கிழக்கில் முதலமைச்சரைக் கொண்டிருப்பது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தில் 3 எம்.பி.க்களுடன் அதிகமான மக்களின் வாக்குகளைப் பெற்ற கட்சியுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக முன்னர் மாயக்கல்லி மலை விவகாரம் சூடுபிடித்திருந்த வேளையில் மு.கா. தலைவர் ஹக்கீம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதியும் அளித்திருந்தார். ஆனால் எல்லாம் வாய்ச்சொல்லோடு முடிந்த மாதிரியே தெரிகின்றது.

எனவே, றவூப் ஹக்கீம் மட்டுமன்றி மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் தலைமைகளும் ஏனைய சிறிய, பெரிய அரசியல்வாதிகளும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். ‘இது சர்வதேச நிகழ்ச்சி நிரல், சதித்திட்டம், ஆட்சியைக் கவிழ்க்கும் சூழ்ச்சி, இனங்களுக்கு இடை;யில் முறுகலை ஏற்படுத்தும் திட்டம்…’ என்றெல்லாம் அறிக்கை விடுவதற்கும், அரசாங்கத்திற்கு சவால் விடுவதற்கும், அதிகாரமில்லாதவர்களிடம் கோரிக்கை விடுப்பதற்கும், மக்களுக்கு படம்காட்டுவதற்கு அரசியல்வாதிகளை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யவில்லை.

மாணிக்கமடுவிலோ அதற்கு சரியாக பக்கத்தில் உள்ள கிராமங்களிலோ சிங்களவர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் மாயக்கல்லி மலையில் சிலை வைத்தது ஒருபுறமிருக்க, இப்போது அங்கு ஒரு விகாரை அமைக்க முற்படுவது முஸ்லிம்கள், தமிழர்களிடையே கடுமையான விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதுவும், மேற்குறிப்பிட்ட புத்தரின் போதனைகளை மறந்து முஸ்லிம்களின் காணியை அபகரித்து அதில் விகாரை கட்ட முனைவதும் இது தொடர்பான விடயங்களில் ஞானசார தேரர் தலையிடுவதும் நல்ல அறிகுறிகள் அல்ல.

அதேவேளை, முஸ்லிம்களுக்கு சொந்தமான காணியை பலாத்காரமாக சிங்களவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டிய அளவுக்கு இக்கட்டான நிலைக்கு அரச அதிபரும் ஏனைய அதிகார தரப்பினரும் ஆளாக்கப்பட்டிருக்கின்றனர். அத்துடன் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஞானசார உரையாற்றுகின்ற பாங்கு, அதட்டும் தொனியிலானதாக இருக்க, மற்றெல்லாரும் வாய்பொத்தி நிற்கின்றனர். எனவே இதற்குப் பின்னால் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு அரசியல் பலம் இருப்பது தெரிகின்றது.

நில அபகரிப்பா?

சிறுபான்மையினரின் பேராதவரவுடன் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாடுகளை முன்வைத்து வாக்குக்கேட்டு வெற்றிபெற்ற நல்லாட்சி அரசாங்கமானது இது விடயத்தில் மெத்தனமாக செயற்படுகின்றமை மஹிந்த காலத்தை முஸ்லிம்களுக்கு ஞாபகப்படுத்துகின்றது. நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு பல விடயங்கள் தொடர்பான அதிகாரத்தின் ஆட்சியை இனவாதிகளிடம் ஆளக் கொடுத்து விட்டார்களா? என்று மக்கள் அங்கலாய்க்க தொடங்கியிருக்கின்றார்கள்.

முஸ்லிம்களும் தமிழர்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசத்தில் நல்ல பல போதனைகளை மனித சமுதாயத்திற்கு விட்டுச் சென்ற புத்தரின் சிலை வைக்கப்படுவதும் அவரை வழிபட உண்மையான பக்தர்கள் வருவதும் இந்துக்களினதும் இஸ்லாமியர்களினதும் மதம்சார் புனிதத்தை கெடுத்துவிட மாட்டாது. ஆனால், இது வெறுமனே வழிபாட்டு நோக்கத்திற்கு அப்பால், சிறுபான்மையினரின் நிலங்களின் உள்ளே ஊடுருவும் ஒரு மறைமுக நோக்கத்தை கொண்டுள்ளதா என்ற ஒரு அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இனவாதம் பற்றி;ய கடந்தகால அனுபவமும் நில ஆக்கிரமிப்பின் வடிவங்களும் அந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிந்த போது தற்போதுள்ள அம்பாறை மாவட்டத்தில் இருந்த பதிவு செய்யப்பட்ட சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் குறைவாகும்.
அப்படியிருந்தும் அம்பாறையை அப்புதிய மாவட்டத்தின் தலைநகராக்கினார்கள். அத்தோடு மீரிகம, நீர்கொழும்பு மற்றும் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்களை கூட்டிவந்து திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றி, தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த நிலப்பரப்பில் சிங்களவர்களின் தொகையை அதிகரித்தார்கள். காணிகளை வழங்கினார்கள்.

இப்படி பல தடவைகள் தமிழ், முஸ்லிம்களுக்கு உரித்தாகக் கூடிய காணிகள் பல வழிகளில் ஆக்கிரமிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இதனால் மக்கள் இழந்திருக்கின்றார்கள். கல்முனை தொடக்கம் பொத்துவில் வரை பல இடங்களில் பௌத்த தொல்பொருட்கள் இருப்பதாக இனவாதிகள் கூறிவரும் நிலையில், மாயக்கல்லி மலையைச் சுற்றி விகாரை அமைக்க முனைவது ஏதோ ஒரு உள்நோக்கை கொண்டது என்றே சிறுபான்மையினர் கருதுகின்றனர்.

நேற்று சிலை வைத்தவர்கள், இன்று விகாரை கட்ட முனைபவர்கள், நாளை விகாரையைச் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என்று யாராலும் உத்தரவாதமளிக்க முடியாது. இந்தக் காரணத்திற்காகவே தமிழர்களும் முஸ்லிம்களும் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றார்களே தவிர அவர்கள் நிச்சயமாக சத்தியமாக புத்தரின் போதனைகளுக்கு பௌத்த மதத்திற்கோ ஒருநாளும் எதிரானவர்கள் அல்லர். எனவே, அரசாங்கம் இது குறித்து உடனே கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டாமல் அரச உயர்மட்டத்துடன் நேரடியாக பேச வேண்டும். அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயத்தில் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வடக்கில் இவ்வாறான ஒரு அத்துமீறலை இனவாதிகள் மேற்கொண்டால் த.தே.கூ. எவ்வாறு செயற்படுமோ அவ்வாறே கிழக்கிலும் களமிறங்க வேண்டும்.

மிகக் குறிப்பாக, இலங்கையில் மூவின மக்களினதும் வரலாற்று உறவு பற்றி அறிந்து வைத்துள்ள பௌத்த மகா சங்கத்தினர் மற்றும் மகாநாயக்க தேரர்கள், பௌத்தத்தின் பெயர் சொல்லி ஏனைய இனங்களை வேதனைப்படுத்தும் கடும்போக்காளர்களுக்கு புத்தரின் உண்மையான போதனைகளை எடுத்துக் கூற வேண்டிய பொறுப்புள்ளது.

அனுபவப்பட்டும் சிலருக்கு ஞானம் பிறக்கவில்லை!

– ஏ.எல்.நிப்றாஸ்-
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post