May 7, 2017

யார் இந்த காலித் மிஷ்அல் ?ஹமாஸின் வரலாற்றுப் பாதையில் 'உஸ்தாத் காலித் மிஷ்அல்' ஓர் திருப்பமுனையே. ஏனெனில், உணர்வுகளாலும் , வேதனைகளாலும் , துன்பியல் அனுபங்களாலும் வடிவமைக்கப்பட்ட பலஸ்தீனப் பிரச்சினைக்கு 'அரசியல் வடிவம்' கொடுத்ததில் உஸ்தாத் மிஷேல் முன்னணி வகிக்கிறார்.

 1995 – 2017 வரை அதன் அரசியல் துறை தலைவராக அவர் பணியாற்றி இருக்கிறார். கிட்டதட்ட இரண்டு தசாப்த காலம். நீண்ட காலம். இக்காலப் பகுதியில் போராட்டத்தின் அரசியல் வடிவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆயுத வடிவத்தை வைத்திருப்பதில் நியாயமாக உழைத்தவர். மிஷ்அல் ஓர் பழுத்த இராஜதந்திரி. 

காலமாற்றத்திற்கு ஏற்ப மாற்றமுறும் 'இஸ்லாமிய சிந்தனை' 'அரசியல் வலுச்சமநிலை' மற்றும் 'சர்வதேச பொது அபிப்பிராயம்' என்ற மூன்று தளங்களையும் தெளிவாகப் புரிந்த நிலையில் ஹமாஸை மிஷ்அல் நெறிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ஹமாஸின் புதிய அரசியல் ஆவணத்தில் 'ஸியோனிஸத்துடனான போராட்டம் ஓர் விடுதலைப் போராட்டமே அன்றி, மதரீதியான போராட்டமல்ல' என்ற கூறு உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதனை சாதித்துக் கொள்வதற்காக அப்துல் வஹ்ஹாப் அல் மிசைரியின் 'ஸியோனிஸம்' பற்றிய ஆய்வுகள் மற்றும் புத்தகங்கள் மிஷ்அல் காரியாரலய மேசையில் எப்போதும் இருந்திருக்கிறது.

உண்மையில், ஓர் சிக்கலான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இயக்கமொன்று சந்திக்கும் மிக முக்கியமான சவால் என்ன தெரியுமா? அதுதான் 'குறித்த போராட்டத்தில் விட்டுக் கொடுக்க முடியுமான அடிப்படைகள் எவை? நெகிழ்ந்து கொடுக்க முடியுமான விடயங்கள் எவை? என்ற புரிதலில் ஏற்படும் கோளாருகளாகும். 

இந்த சிக்கலிருந்து ஹமாஸை பாதுகாத்தவர் மிஷ்அல். எனவேதான், பலஸ்தீனப் போராட்டத்தின் அடிப்படைகள் , கிளையம்சங்கள் மற்றும் மாற்றமுற முடியுமான விடயங்கள் பற்றிய ஆழமான அறிவை உள்ளடக்கியுள்ள களைக் களஞ்சியமே மிஷேல் எனலாம். இந்த அனுபவத்தின் தொகுப்பை அப்படியே ஹமாஸ் வெளியிட்டுள்ள புதிய அரசியல் கொள்கைத் தத்துவ ஆவணத்தில் படிக்க முடியும். 

மேலும், பதாஹ் அமைப்புடனான முரண்பாடுகள் , ஒஸ்லோ உடன்படிக்கை மற்றும் இஸ்ரேலிய அராங்கத்துடனான பேச்சுவார்த்தைகள் , சிரியப் போர் , ஈரானுடனான உறவுகள் வலைகுடா அரசாங்கங்களுடனான உறவுகள் மற்றும் எகிப்தின் இராணுவப் புரட்சி போன்ற ஊகிக் முடியாத அரசியல் சுனாமிக்குல் நின்று கொண்டு ஹமாஸ் எடுத்த சகல முடிவுகளிலும் , நிலைப்பாடுகளிலும் 'அடிப்படைகள் மற்றும் நெகிழ்வுத் தன்மை' பற்றிய மிஷ்அலின் ஆழ்ந்த புரிதல் துலங்குகிறது.

மட்டுமன்றி , அடிப்படைகளை வலியுறுத்திப் பேசுபவர்களும் மற்றும் கிளையம்சங்களை , மாறும் களநிலவரங்களை முன்னுரிமைப்படுத்தி பேசுபவர்களும் எந்த இயக்கத்திலும் இருப்பார்கள். இவ்விரண்டு தரப்பினரினதும் பொறிக்குல் இயக்க நகர்வுகள் சிக்குண்டு கடும் விவாதமாக அது தோற்றமெடுப்பதும் நிதர்சனமே. 

ஆனால், இந்த இரண்டு தரப்பினரையும் ஒரே திசையில் , இயக்கத்தின் இலக்கில் ஒன்றிணைப்பதிலேயே தலைமையின் வெற்றி தங்கியிருக்கிறது. சரியான தருணத்தில் அடிப்படைகளை அழுத்தமாக பேசுபவர்களை முன்னுரிமைப்படுத்துவது மற்றும் வேறு பொருத்தமான தருணங்களில் களயதார்த்தங்களை , நெகிழ்வுத் தன்மை கொண்டவர்களை ஆதரிப்பது என தலைமையின் ஆற்றல் வெளிப்பட வேண்டும்.

அடிப்படைகளை ஆதரிப்பவர்களுக்கும் மற்றும் நெகிழ்த்தன்மையை ஆதரிப்பவர்களுக்கும் இடையிலான சிக்கல்கள் ஹமாஸையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவாகவே, 1988 வது ஆண்டு அஹ்மத் யாசீன் எழுதிய முதலாவது அரசியல் ஆவணத்தை மாற்றுவதற்கு இவ்வளவு நீண்ட காலம் எடுத்ததாக பல உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், ஹமாஸின் புதிய அரசியல் ஆவணத்தை மிஷேல் தனது தலைமையை ஒப்படைப்பதற்கு 05 தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். பின்பு, ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இரண்டு விடயத்தை திரும்ப , திரும்ப வலியுறுத்தியதனை அவதானிக்க முடியும். முதலாவது , 'இந்த புதிய ஆவணம் இயக்க அங்கத்தவர்களின் முழுமையான ஆதரவுடன் எழுதப்பட்டிருக்கிறது' என்பதாகும். இரண்டாவது, அடுத்த கட்ட களயதார்த்தங்களை முற்படுத்தி போராட்டத்தை நிர்வகிப்பதற்காக 'புதிய அரசியல் ஆவணமே' இதுவாகும்' என்பதாகும்.

இந்தப் பதில்கள் ஒர்; உள்ளார்த்த அம்சத்தை கோடிட்டுக் காட்டுகின்றன. அதாவது, அடிப்படை மற்றும் நெகிழ்வுத் தன்மை முகாம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இயக்க அங்கத்தவர்களுக்கு மத்தியில் பூரண உடன்பாட்டை மிஷேல் கட்டியெழுப்பிருக்கிறார்.

 அதுவே 'இயக்கத்தின் முழுமையான உடன்பாட்டில் புதிய ஆவணம் எழுதப்பட்டிருக்கிறது' என்ற மிஷ்அலின் வசனம் பிரதிபளிக்கிறது. அடுத்து, எப்போதும் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களது கையெழுத்துக்களை தங்கக் கோட்பாடுகளாக மதிக்கும் இயக்க அங்கத்தவர்களுக்கும் , புதிய உள்ளீடுகளை உள்வாங்க வேண்டும் என்ற விவாதத்தை வலியுறுத்துபவர்களுக்கும் மத்தியில் உடன்பாடு காண்பதிலும் மிஷேல் வெற்றியடைந்திருக்கிறார். 

ஏனெனில், 'அடுத்த கட்டத்தில் இயக்கத்தை நெறிப்படுத்தும் ஆவணம்' என்ற இராஜதந்திர மொழியில் மிஷேல் கூறியதன் இரகசியம் யாதெனில், அஹ்மத் யாசீன் எழுதிய பழைய ஆவணத்தை நிராகரிக்காமல் புதிய ஆவணத்தை அறிமுகம் செய்திருக்கிறார் அவர். அதாவது, பழைமைக்கும் , புதுமைக்கும் மத்தியில் நிலவும் உள்வீட்டு விவாதத்தை கவனமாக மிஷ்அல் கையாண்டிருக்கிறார் என்பது புரிகிறது.

ஓர் இஸ்லாமிய இயக்கம் தனது அடிப்படைகள் என்ன ? இலக்குகள் என்ன? என்ற விடயத்தில் ஆழ்ந்த புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். அதுவே, மாறும் களயதார்த்தங்களை முகங்கொடுப்பதற்கான சரியான இராஜந்திரங்களை வகுப்பதற்கு துணை செய்யும் என்கிறார் மிஷேல். ஏனெனில், யதார்;த்தங்களை மாற்றியமைக்க முடியாது. 

ஆனால், யதார்த்தங்களை தமது இயக்கத்தின் இலக்குகளை நோக்கி வழிநடாத்த முடியும். உதாரணமாக, 1990 களுக்குப் பிந்திய பலஸ்தீனின் களயதார்த்தங்களை தோற்றுவித்ததில் ஒஸ்லோ உடன்படிக்கை முக்கியமானது. இந்த வகையில் மிஷேல் சொல்கிறார் : 'நாங்கள் ஒஸ்லோவை நிராகரித்தோம். 

ஏனெனில், அது எமது அடிப்படைகளுக்கு முரணானது. ஆனால், அதனை ஓர் களயதார்த்தமாகவும் அங்கீகரித்தோம். எனவே, அதனுடன் உறவாட தீர்மானித்தோம். விளைவாக, ஒஸ்லோ உடன்படிக்கையின் பிரகாரம் 2006 இல் பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் குதித்தோம். ஆனால், எமக்கும் பதாஹ்வுக்கும் இடையிலான வித்தியாசம் என்ன தெரியுமா? , களயார்த்தத்தை உருவாக்கியவர்களின் சமன்பாட்டிற்கு கட்டுப்பட்டு பதாஹ் அதனை அங்கீகரித்தது. 

ஆனால் நாம் எமது சொந்த போராட்ட சமன்பாட்டின் ஒளியில் ஒஸ்லோ உடன்படிக்கையுடன் நாம் உறவாடினோம். அதாவது, அரசியல் அதிகாரத்தை இலஞ்சமாகக் கொடுத்து பலஸ்தீனப் குழுக்களது ஆயுத பரிமாணத்தை ஒடுக்குவதே ஒஸ்லோவின் மூல தத்துவமாகும். ஆனால், நாம் ஒஸ்லோவின் மூல தத்துவத்துடன் உடன்படாமல் , ஒஸ்லோ முன்வைத்த பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் குதித்தோம். ஒஸ்லோ என்ற யதார்த்தத்தை ஹமாஸ் தனது அரசியல் தெளிவால் வெற்றி கொண்டது என மிஷ்அல் கூறுகிறார்.

கடைசியாக, இஸ்லாமிய இயக்கம் ஓரு பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டுக்கு வருவதென்பது ஓர் ஆய்வு நிறுவனம் ஆய்வு முடிவுகளை வெளியிடுவது போன்றல்ல என்கிறார் மிஷ்அல். அதாவது, அதுவோர் பிரசவ வேதனைக்கு சமனானது என்கிறார் அவர். ஏனெனில், பிரச்சினையை சொல்லவும் வேண்டும். ஆனால் உம்மாவின் எதிர்பார்ப்புகளில் அவநம்பிக்கையை ஏற்படுத்தவும் முடியாது. 

அறிவை மதிக்கவும் வேண்டும். அதற்காக யதார்த்தத்தை கிடப்பில் போடவும் முடியாது. உடன்பாட்டை பாதுகாக்கவும் வேண்டும். ஆனால், முரண்படும் புள்ளிகளை வெளிச்சமிட்டுக் காட்டவும் வேண்டும். எதிரியுடன் பேசவும் வேண்டும். ஆனால், எதிரிக்கு எமது பிளவுகளை காட்டிக் கொடுக்கவும் கூடாது. இப்படி பல்வேறு மதிப்பீடுகளுக்குல் உழைக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் , அதன் உளவியல் , அதன் தெரிவுகள் என்பன மிகவும் சிக்கலானவை என்கிறார் மிஷேல். இவ்வளவு ஆழமான இஸ்லாமிய இயக்க போராட்டத்தை வெற்றி கொண்டவர் மிஷ்அல் என்று அடித்துச் சொல்ல முடியும்.

- ஸக்கி பவுஸ்
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post