கம்பளை சிறுவன்கடத்தல் ; மேலும் இருவர் கைதுகம்பளை பகுதியில் சிறுவன் ஒருவனை கடத்திய சம்பவம் தொடர்பில் இன்று மாலை மேலும் இருவர் காத்தான்குடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கணவனும் மனைவியும் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பெண்கள் இருவர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.


அண்மையில், கம்பளை பகுதியைச் சேர்ந்த சுமார் இரண்டு வயதான சிறுவன், அவனது உறவினருடன் சென்ற நிலையில், காணமல் போயிருந்தார்.  இதனையடுத்து, கப்பம் பெறும் நோக்குடன் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டமை தெரியவந்தது. பின்னர் குறித்த சிறுவனை மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.


இதேவேளை, சிறுவனுடன் காணாமல் போனதாக கூறப்பட்ட அவனது மாமாவும் பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவரே கடத்தலுக்கு திட்டமிட்டுள்ளமையும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.