கிழக்கு முதலமைச்சரின் தேர்தல் நாடகம் அம்பலம், மக்கள் விசனம்(எஸ்.அஷ்ரப்கான்)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் ஏறாவூர் பிரதேசத்தில் அபிவிருத்திக் குழுக்களை அமைத்து வருவதாகவும், இது மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றிபெறுவதற்குரிய நாடகமாகும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரச்சார செயலாளர் பீ.எம்.வஹாப் தெரிவித்தார்.
அபிவிருத்திக் குழுக்கள் எனும் பெயரில் ஏறாவூர் பிரதேசத்தில் முதலமைச்சரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து (14) இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் சுமார் 5வருட காலமாக அதிகாரத்தில் இருந்த ஹாபீஸ் நசீர் அகமட் குறிப்பாக முதலமைச்சு மற்றும் அமைச்சுக்களை தன்வசம் வைத்திருந்தார். அக்காலப் பகுதியில் ஏறாவூர் பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர் எந்தவொரு குழுக்களையும் நியமிக்க முன்வரவில்லை.

தற்போது கிழக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைந்து தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள்ள தருவாயில் முதலமைச்சர் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் அபிவிருத்திக் குழுக்களை அமைத்து வருகிறார். இதனால் தற்போது எந்தவொரு விடயத்தினையும் சாதித்துவிட முடியாது என்பது மக்களுக்கும் நன்கு தெரியும். இப்போது காலம் கடந்தே முதலமைச்சருக்கு ஞானம் பிறந்திருக்கிறது.

கிழக்கு மாகாணத்திலே பெரும் அதிகாரத்தை வைத்துக்கொண்டிருந்த போது அபிவிருத்திப் பணிகளை இந்த மண்ணிலே செய்வதற்கு தவறி விட்டுவிட்டு தனது பதவி பறிபோகும் தருவாயில் அபிவிருத்திக் குழுக்கள் எனும் போர்வையில் சிறு சிறு குழுக்களை அமைத்து மக்களை ஏமாற்றுவது கவலையான விடயமாகும். இக்குழுக்கள் மக்களை அவரது தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதற்குரிய முன்னேற்பாடாகும். மக்களை ஏமாற்ற முனையும் முதலமைச்சரின் இச்செயற்பாட்டை ஏறாவூர் மக்கள் புரியாமலுமில்லை இந்நடவக்கையானது அவரது வங்குரோத்து அரசியலின் வெளிப்பாடாகும்.

எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி மீண்டும் முதலமைச்சர் கதிரை பெற்றுக்கொள்ளலாம் என ஹாபீஸ் நசீர் அகமட் என்னுவது வெறும் பகல் கனவாகும். எதிர்வரும் தேர்தலில் தனக்கு ஏறாவூர் பிரதேசத்திலே இருக்கின்ற பாரிய சவால்களை சமாளிப்பதற்காகவே அவர் இன்று அபிவிருத்திக் குழுக்கள் என்றும் மின்விளக்கு ஒளியேற்றம் என்றும் வீதிகள் சுத்தப்படுத்தல் என்றும் மக்கள் மத்தியில் அபிவிருத்தி எனும் போர்வையில் மாயைகளை காட்டுவதற்கு முற்படுகிறார்.

முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக ஏறாவூர் பிரதேசமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் பிரதேச மக்களும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தான் சார்ந்த கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இருக்கத்தக்கதாக அவரைப் புறக்கனித்து கட்சி செயற்பாடுகளையும், அபிவிருத்தி விடயங்களையும் முதலமைச்சர் முன்னெடுத்து வருகின்றார். இதன்காரணமாக முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோருக்கிடையில் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் பாரிய விரிசல் காணப்படுகிறது.

இதனால் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவினதும் அவரது ஆதரவாலர்களினதும் பெரும் எதிர்ப்பினையும் முதலமைச்சர் சம்பாதித்துள்ளார். எதிர்வரும் தேர்தல் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டுக்கு பெரும் சவாலாகவே அமையவுள்ளது. அது அவருக்கு தெரியாமலுமில்லை குறிப்பாக தனது கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் ஆதரவாலர்களின் வாக்கு தனக்கு ஒரு போதும் கிடைக்காது என்பதனை உணர்ந்துகொண்ட முதலமைச்சர் தற்போதே தேர்தலுக்கு தயாராகிவருகின்றார்.

தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டு இன்று கண் விழித்துக்கொண்ட முதலமைச்சர் ஏறாவூர் பிரதேச மக்களினதும், மட்டக்களப்பு மாவட்ட மக்களினதும் வாக்குகளை சூறையாடுவதற்கு அபிவிருத்தி நிகழ்வுகள் என்றும் அபிவிருத்திக் குழுக்கள் என்றும் மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சுமார் 5வருடங்கள் பெரும் பதவிகளை வகித்த இவர் கிழக்கு மாகாணத்திலோ அல்லது தான் பிறந்த ஏறாவூர் மண்ணிலோ குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு எந்தவொரு பாரிய அபிவிருத்திப் பணியையும் செய்ததாகத் தெரியவில்லை.

குறிப்பாக இன்று கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர் அறிக்கை மாத்திரம் விடுவதிலே வல்லவராக காணப்படுகிறார். கடந்த ஏப்ரல் மாதத்திற்குள் கிழக்கிலே 4ஆயிரம் தொழில் வாய்ப்புக்களை வழங்குவேன் எனக் கூக்குரலிட்டார் இன்று ஏப்ரல் கடந்து மே மாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஒன்றுமே நடைபெறவில்லை. கிழக்கிலே சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி வெளிநாட்டுக்கு பெண்கள் செல்வதனை குறைப்பேன் என்றார் ஆனால் இவரின் கூற்றுக்குப் பின்னரே அதிகமான பெண்கள் வெளிநாடு செல்வதனையும் அவதானிக்க முடிகிறது.

முதலமைச்சர் விடுத்த வாக்குறுதிகள் தொடர்பில் மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். குறுகிய அரசியல் நோக்கம் கொண்டு ஏறாவூர் நகர சபையில் வெற்றிடமில்லாத பதவிகளுக்கு அப்பாவி இளைஞர்களுக்கு தொழில்களை வழங்கி அவ்விளைஞர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முனைகிறார். அதே போன்றுதான் தனது அரசியல் கேந்திர நிலையமாக நகர சபையை பயன்படுத்திவருகிறார்.

குறிப்பாக ஏறாவூர் பிரதேச வறிய மக்களுக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட கோழிக் குஞ்சுகளை மீளப்பெற்ற இவர் அப்பிரதேச வறிய மக்களின் எதிர்ப்பினையும் சம்பாதித்துள்ளார். இந்நிலையில் அபிவிருத்திக் குழுக்களையும் அமைத்து தனது தேர்தல் பணிகளுக்காக ஏழை மக்களை பயன்படுத்தி ஏமாற்றப்பார்க்கிறார். முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியுற்ற நிலையில் மீண்டும் ஒரு தேர்தலில் அவர் வெற்றிபெறுவது என்பது மிகவும் கேள்விக்குறியானதொரு விடயமாகும்.

எமது கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை கடடியெழுப்புவதில் முதலமைச்சர் எந்தவொரு முறையான திட்டங்களையும் வகுக்கவில்லை மாறாக எமது மாகாணத்தினுடைய கல்வியையே அவர் சீரழித்துள்ளார். கல்விக்குள்ளும் அவரது அரசியல் நடவடி்கைகளையே மேற்கொண்டு வருகிறார். மேலும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தினை தனது உறவினர்களுக்கு பதவி வழங்கும் இடமாகவும் அவர் மாற்றியுள்ளார். அதுமாத்திரமல்லாமல் இப்பிராந்தியத்தில் அரசியல் முரண்பாடுகளையும் தோற்றுவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரின் நிதியின் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளைத் தவிர இவரால் எந்தவொரு பணிகளையும் ஏறாவூர் மண்ணில் மேற்கொள்ள முடியவில்லை இது அவருடைய இயலாமையினையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு மக்களை புறக்கனித்து செயற்பட்ட முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராகலாம் நினைப்பது வேடிக்கையான விடயமாகும்.

குறுகிய அரசியல் நோக்கம் கொண்டு செயற்படும் முதலமைச்சருக்கு ஏறாவூர் பிரதேச மக்கள் எதிர்வரும் தேர்தலில் தக்கபாடம் புகட்ட வேண்டும் எனவும் வஹாப் மேலும் தெரிவித்தார்.