May 3, 2017

வடக்கு கிழக்கு இணைப்பை ஆதரிக்கிறேன் : அய்யூப் அஸ்மின்


நான் தனிப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஆதரவானவன், பல்வேறு நியாயங்களின் அடிப்படையில் அது தேவையானது என்று வலியுறுத்துகின்றவன்; அதனை கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று நான் உறுதியாகக் கூறிவருகின்ற ஒருவன் என வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஆலையடிவேம்பில்  இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
இந்த மே தின நிகழ்விலே தொழிலாளர்களின் உரிமைகள் குறித்துப் பேசப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் நான் வேறொரு விடயம் குறித்துப் பேச விளைகின்றேன்; நான் அம்பாறையில் இடம்பெறும் இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு வந்திருப்பது; என்னுடைய எண்ணங்களிலே மேலோங்கியிருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்ற செய்தியை உங்களிடத்தில் விட்டுச் செல்வதற்காகவேயாகும். 
இந்த அரங்கிலே தமிழ் மக்களோடு இணைந்து முஸ்லிம் மக்களும் பங்குகொண்டிருப்பது எனக்கு நம்பிக்கையளிக்கின்றது; தமிழ் முஸ்லிம் உறவு முற்றாக அழிந்துவிட்டவில்லை அது உயிரோட்டமாக சீர்செய்யப்படுவதற்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன என்பதை அவை கட்டியம் கூறுகின்றன.

வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலே தமிழ் முஸ்லிம் உறவு இயற்கையானது; மக்களிடத்தில் அந்நியோன்யமான உறவுகள் இருந்தன இதனை நாம் நீண்டகாலமாக அனுபவித்திருக்கின்றோம். ஆனால் இடையில் அந்த உறவில் விரிசல்கள் ஏற்பட்டன, அவை செயற்கையாக புகுத்தப்பட்ட விரிசல்கள், வெளிச்சக்திகளினால் அவை புகுத்தப்பட்டும் இருக்கலாம்;  அந்த விரிசலானது தவறானது, எவருக்கும் நன்மையளிக்காதது, இதனை நாம் உணர்ந்துகொள்தல் அவசியமாகும். தலைவர் அஷ்ரப் அவர்கள் 1977களிலே ஒரு மேடைப் பேச்சிலே “அண்ணன் அமிர்தலிங்கம் தனிநாட்டினைப் பெற்றுத்தரத் தவறினால் தம்பி அஷ்ரப் அதனைப் முன்னின்று பெற்றுத்தர உழைப்பேன்” என்று பேசினார்; அப்போது தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைந்தா இருந்தது. 1987களிலே இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதே அப்போது தமிழ் முஸ்லிம் உறவு சீர்குலைந்தா இருந்தது. இல்லை, குறிப்பாக 1980களின் பின்னர் ஏற்பட்ட பல்வேறு கசப்பான சம்பவங்கள் எம்மைப் பிரித்துவைத்திருக்கின்றன. ஒரு தவறு நடந்துவிட்டால் தவறு நடந்துவிட்டதே என்பதற்காக அதனைத் தொடர முடியாது. அதனை எங்கோ ஒரு இடத்திலிருந்தி திருத்தி மீண்டும் சரியான பாதையில் செல்ல நாம் முயல வேண்டும்.

ஐயா சம்பந்தன் அவர்கள் வடக்கும் கிழக்கும் தமிழ்பேசும் மக்களின் பிரதேசமாக இணைந்திருக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்; அதற்கான நியாயங்களையும் அவர்கள் எடுத்துறைப்பார்கள், அந்த நியாயங்களை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் இதுவரை சரியாக உணர்ந்துகொள்ளவில்லை என்றுதான் நான் நினைக்கின்றோன். இப்போது அதனை உணர்வதற்கான ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கின்றது என்றும் நான் கருதுகின்றேன். 
இப்போது முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கிலே இரண்டு முக்கியமான காணிசார்ந்த பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்; ஒன்று வடக்கிலே மன்னாரிலே மறிச்சுக்கட்டியிலே தோன்றியிருக்கின்ற காணிப்பிரச்சினை; அடுத்தது அம்பாறையிலே இறக்காமத்திலே மாயக்கல்லிலே தோன்றியிருக்கின்ற காணிப்பிரச்சினை; முஸ்லிம் சமூகத்திலே 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் இருக்கின்றன, தலைவர்கள் இருக்கின்றார்கள், அவர்களால் இவற்றுக்கான சரியான தீர்வை இதுவரை பெற்றுத்தர முடிந்ததா என்றால், இன்றுவரை இல்லை; 

ஆனால் தலைவர் சம்பந்தர் அவர்களும் அமைச்சர் ஹக்கீம் அவர்களும் கூட்டாக ஜனாதிபதியிடம் மாயக்கல்லி பிரச்சினை குறித்துப் பேசியபோது அதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது; முதற்கட்டமாக மேலதிக கட்டுமானப்பணிகள் எதுவும் இடம்பெறாதவண்ணம் ஜனாதிபதி தடையுத்தரவினை வழங்கியிருக்கின்றார்; அதற்கான தீர்வைப் பெற்றுத்தருவதில் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களின் பங்களிப்பும் இருக்கின்றது, இவ்வாறுதான் தமிழ் முஸ்லிம் மக்களிடையே ஏராளமான பிரச்சினைகளும் பிணக்குகளும் இருக்கின்றன, அவற்றை மனவிட்டுப் பேசவும் தீர்ப்பதற்குமான உபாய மார்க்கங்களை நாம் உருவாக்க முடியும், அவ்வாறு பிரச்சினைகள் தீர்கின்ற போது நாம் இணைந்த சமூகங்களாக பலமான சமூகங்களாக இருக்க முடியும்.

இறுதியாக  நான் தனிப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கு இணைப்பிற்கு ஆதரவானவன், பல்வேறு நியாயங்களின் அடிப்படையில் அது தேவையானது என்று வலியுறுத்துகின்றவன்; அதனை கிழக்கு மாகாண மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று நான் உறுதியாகக் கூறிவருகின்ற ஒருவன்; அதனை எதிர்க்கின்றவர்கள் இனவாத ரீதியான நியாயங்களையே முன்வைக்கின்றார்கள். அம்பாறை மக்களாகிய நீங்கள் வடக்குக் கிழக்கு இணைப்பை வலியுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கைக்கு நான் எதிரானவன், அது முஸ்லிம் மக்களுக்கு ஆபத்தானதும் எவ்வித நன்மைகளையும் பெற்றுத்தராத கோரிக்கை என்றே நான் கூறுகின்றேன். 

அம்பாறை மக்கள் தூரநோக்கோடு சிந்திக்கவேண்டும், முஸ்லிம் தனி அலகு என்ற கோரிக்கையை விடவும் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய உயர்வான முறைமைகளை நீங்கள் வலியுறுத்தவேண்டும். அம்பாறை மக்கள் தனி அலகுக் கோரிக்கைக்கு எதிராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post