வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க புதிய நிகழ்ச்சித் திட்டம்


வெள்ளத்தினால் இருப்பிடங்களை இழந்தவர்களின் வீடுகள், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி ஆகியன தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை மீளத் திரும்புவதற்காக அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்கும்.
இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்த பின்னர், தேவையான நிவாரணம் வழங்கப்படும். முதலாவதாக வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்ள பிரதேசங்களுக்கு விமானத்தின் மூலம் உணவுகள் வழங்கப்படும்.
இதேவேளை, இருப்பிடங்களை இழந்தவர்களின் வீடுகள், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி ஆகியன தொடர்பிலான விடயங்களை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமென்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திடீர் அனர்த்த நிலைமையினால் சேதமடைந்த வீடுகளை அரசால் நிர்மாணிப்பதற்கு உரிய நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.