May 8, 2017

அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவின் அறிக்கையால் வெகுண்டெழுந்த சிவில் சமூகம்லத்தீப் பாரூக் 
சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவில் (உலமா சபை) காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவையை வலியுறுத்தி இருந்தேன். ஆனால் எதிர்ப்பார்த்தபடியே சமூகம் அதில் வித்தியாசமான கருத்துக்களையே கொண்டிருந்தது.
எவ்வாறாயினும் கொழும்பு டெலிகிராப்பில் பெண்கள் ஆண்களுக்கு சமமானவர்கள் அல்ல என்ற ரீதியிலும் பருவம் அடைவதற்கு முன்பே திருமணத்தை அனுமதிக்கலாம்
என்ற ரீதியிலும் கடந்த மாதம் உலமா சபையின் கூற்றுக்கள் வெளியாகியிருந்த நிலையில் உலமா சபையை உண்மையான கல்விமான்களைக் கொண்டு பூரணப்படுத்தப்பட வேண்டும் என்ற பிரசாரம் தற்போது மேலோங்கத் தொடங்கியுள்ளது.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்துக்கான திருத்தங்கள் பற்றி உலமா சபை பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் மரபு ரீதியான சில குழுக்களுக்கும் சமர்ப்பித்துள்ள யோசனைகளின் படி ஒரு பெண் குவாஸி (நீதிபதி) நியமிக்கப்படுவதற்கு தகுதி அற்றவர்” என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இதற்கு முஸ்லிம் புத்தி ஜீவிகளும் சிவில் சமூகத்தவர்களும் உடனடியாக பதில் அளித்துள்ளனர்.
அடிப்படை உரிமைகளை முடக்குவதற்கு பாரம்பரிய மரபுகளை காரணம் காட்டும் சமயத் தலைவர்களை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களை திருத்தக் கூடியவர்களாக நம்ப முடியாது என்று மகளிர் செயற்பாட்டு வலையமைப்பு (WAN)தெரிவித்துள்ளது. இலங்கையில் முஸ்லிம் பெண்களும் சிறுவர்களும் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல என்பதை அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என றுயுNவலியுறுத்தியுள்ளது. எவ்வாறேனும்  இன் கரிசனையானது முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் அடிப்படை உரிமைகளோடு ஒத்துப் போகவில்லை என்பதே. இருந்தாலும் அவர்கள் அதில் உள்ள குறைகளைக் குறிப்பிடவில்லை. அது இஸ்லாத்துக்கு எதிரானதாகக் கூட இருக்கலாம்.
உலமா சபையின் கூற்று அது மறுசீராக்கம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமை என்பன ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் நலன்களையும் பேணும் ஒரு அமைப்பாக உலமா சபை தன்னை உரிமை கோர முடியாது என்பதையே தெளிவாக்கியுள்ளது. சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களில் உலமா சபையின் மிகத் தீவிரமானதும் விடாப்பிடியானதுமான நிலைப்பாடானது அவர்கள் தமது நிலைப்பாடுகளில் எந்தளவு மந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதையே காட்டுகின்றது. தமது சொந்த சமூகத்தின் நம்பிக்கைகளையும் அபிமானத்தையும் வெல்ல முடியாதவர்கள் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக பணியாற்றும் ஒரு குழுவில் இருந்து நீக்கப்பட வேண்டியவர்கள் என்பதே  இன் நிலைப்பாடாகும்.
முஸ்லிம் தனியார் சட்ட மீளாய்வு பற்றி ஆராயும் குழுவின் தலைவரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் இந்த விடயத்தில் உலமா சபையின் நிலைப்பாடு பற்றி குறிப்பிடுகையில் உலமா சபை மக்கள் அதன் மீது கொண்டிருந்த நல்ல நம்பிக்கைக்கு மாறாக செயற்பட்டு விட்டனர். இந்தக் குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு அவர்கள் தமது எல்லா வளங்களையும் பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவின் உறுப்பினர்கள் மீது உலமா சபை கடும் தாக்கத்தைக் கொண்டிருந்தது.2009ல் நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பற்றி மீளாய்வு செய்யும் குழுவில் உலமா சபை தலைவர் றிஸ்வி முப்தியும் முபாரக் மௌலவியும் உறுப்பினர்களாக உள்ளனர்.
சில தகவல்களின் படி உலமா சபை பிரதிநிதிகள் குழுவொன்று சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துள்ளது. இது சம்பந்தமான குழுவின் இரகசியப் பார்வைக்கும் மீளாய்வுக்குமாக என்னால் தயாரிக்கப்பட்ட ஆவணம் உட்பட பல ஆவணங்களை அவர்கள் கையளித்துள்ளனர். இது பற்றி பேஸ்புக் வழியாகவும் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதில் பிரதம நீதியரசராகக் கூட கடமையாற்றிய அனுபவம் உள்ள சட்ட மேதையான முன்னாள உச்ச நீதிமன்ற நீதியரசர் உலமா சபை தனது குழுவின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் எந்தவொரு திருத்தங்களும் கொண்டு வரப்படுவதை ஆட்சேபிக்கும் வகையில் ஜும்ஆ பிரசாரங்களும் கையெழுத்து பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது  இறைவனிடமிருந்து கிடைக்கப்பெற்ற சட்டம் என்ற ரீதியில் தான் இந்த எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் எனது குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் ஒரு வகை அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான ஒரு கட்டுரையில் பத்திரிகை எழுத்தாளர் அமீனா ஹ{ஸேன் இது பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளார். இந்த விடயம் தொடர்பாகவே அல்லது முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய ஏனைய சீராக்கங்கள் பற்றியோ எந்தவொரு முடிவுக்கும் வரக் கூடிய அதிகாரம் தனக்கே உள்ளது போன்ற ஒரு பிரகடனத்தை உலமா சபை செய்துள்ளது போல் தெரிகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் பேராசிரியர் எஸ்.எச்.ஹிஸ்புல்லாஹ்பேராசிரியர் எம்.ஏ.எம்.சித்தீக்எம்.எம்.நியாஸ்பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனீஸ்ஜே.முபாரக்,டொக்டர்.எம்.இஸட்.எம்.நபீல்டொக்டர். ஏ.எஸ்.எம். நவ்பல்டொக்டர்.ஏ.எல்.எம். மஹ்றூப்ஜே.எம்.நிவாஸ்யூ.எம்.பாஸில் ஆகியோர் இணைந்து இது தொடர்பான ஒரு அறிக்கையில் ஒப்பமிட்டுள்ளனர். முஸ்லிம் பெண்களின் சமூக அந்தஸ்த்தை மேம்படுத்தவும்முஸ்லிம் சமூகத்தின் அபிவிருத்திக்கும் இந்த விடயத்தில் முக்கியமான மாற்றங்கள் அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடல்கள் பற்றி சட்டத்தரணி. கலாநிதி றீஸா ஹமீட் குறிப்பிடுகையில் தற்போதுள்ள முஸ்லிம் குடும்பச் சட்டத்தில் எந்தவித மாற்றங்களைச் செய்யவும் உலமா சபை எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டம் அதன் தற்போதைய வடிவிலே மிகவும் சரியாக இருக்கின்றது அதற்கு எந்த மாற்றங்களும் தேவையில்லை என்று  றிஸ்வி முப்தி பிரகடனம் செய்துள்ளார். துரதிஷ்டவசமாக உலமா சபை தலைவரின் இந்தக் கூற்றுக்கள் வருந்தத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான சட்டங்கள் என்பன பிரத்தியேகமாக உலமா சபை மட்டுமே கரிசணை கொண்ட ஒரு விடயமாக இருக்கக் கூடாது. இந்தக் கட்டுரையில் இது தொடர்பான சில விடயங்களை நான் தொட்டுள்ளேன். திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயது. பலதார மணம்பால் சமத்துவம் என்பன அதில் சில. மறுசீரமைப்பின் தேவை குறித்த கலந்துரையாடல்களுக்கு இது பங்களிப்புச் செய்யும் என எண்ணுகிறேன்.
உலமா சபையை இஸ்லாமிய அடிப்படையில் மறுசீரமைக்க வேண்டும் என்ற ரீதியில் பர்வீஸ் இமாமுத்தீன் குறிப்பிடுகையில் உலமா சபையின் கூற்றானது அதன் முன்னைய நிலைப்பாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவர்கள் இன்னமும் தாங்கள் சரி என்றே நினைக்கின்றனர். ஆம் அவர்கள் தான் உலமா சபை. அவர்கள் தான் கல்வி மான்களின் கூட்டம். தங்களது தலைவரைக் காப்பாற்ற சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவே தவிர வேறு எதுவும் இல்லை.
முஸ்லிம் தனியார் சட்டத்தை உருவாக்கிய எமது முன்னோடிகள் அதை மிகவும் சரியான ஒன்றாக ஆக்குவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துள்ளனர் என்பதே அவர்களின் நிலைப்பாடாகும். அன்றைய காலப்பகுதியை பொருத்தமட்டில் அது மிகச் சரியானதாகவே இருக்கலாம். அவை இன்று மறுசீரமைக்கப்படக் கூடாது அல்லது அவ்வாறான தேவை அற்றது என்பதோ இதன் அர்த்தம் அல்ல. குறிப்பாக குவாஸி நீதிமன்ற நிர்வாக முறைகளில்.
உலமா சபையின் தற்போதைய தலைவர் றிஸ்வி முப்தி. இஸ்லாமிய அறிவைப் பொறுத்தமட்டில் நாட்டில் இவர்தான் மிகவும் உயர் தரத்தில் உள்ள அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகின்றார். நாட்டில் உள்ள மிகச் சிறந்த புத்திஜீவிகள் சிலர் கூட அவரை சவால் விடுக்க முடியாத ஒருவராகத் தான் கருதுகின்றனர். ஆனால் முக்கியமான கேள்வி இப்போதுதான்எழுப்பப்பட்டுள்ளது. உலமா சபையினதும் றிஸ்வி முப்தியினதும் நம்பகத் தன்மை என்னஎன்பதுதான் அந்த கேள்வி. அறிவுஜீவி என்பதற்கு இஸ்லாமிய வகைப்படுத்தல் என்னஉலமா சபை உறுப்பினர்கள் அந்த வகைப்படுத்தலின் கீழ் வருகின்றனராஅவர்கள் உண்மையிலேயே புத்தி ஜீவிகளா?ஒரு பிரிவின் சட்டம் இயற்றும் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ள அவர்களுக்கு சட்டம் தொடர்பாக இருக்கின்ற அறிவும் தெளிவும் என்னபெண் புத்தி ஜீவிகளை ஏற்றுக் கொள்ளவோ அவர்களுக்கு இடமளிக்கவோ மறுக்கின்ற ஒரு அறிவுசார் அமைப்பை சமத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாக எப்படி நம்ப முடியும்?
தவறான கரங்களில் அதிகாரம் இருப்பது ஆபத்தானதும் அழிவை ஏற்படுத்தக் கூடியதும் ஆகும். உலமா சபையின் கூற்றானது அவர்களின் விடாப்பிடித்தனத்தின் தெளிவான வெளிப்பாடன்றி வேறில்லை. அறிவும் விழுமியமும் குறைவாகக் காணப்படும் இவர்கள் ஒரு சமூகத்தின் பொறுப்பைச் சுமக்கத் தகுதி உடையவர்களா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.
இஸ்லாமிய விஞ்ஞானத்தில் புலமை மிக்கவர்களாக தம்மை தாமே உரிமைக் கோரிக் கொள்ளும் ஒரு தனிநபர்கள் கூட்டத்தைக் கொண்டதே உலமா சபை. சட்டம் இயற்றுவதற்கு தேவையான அடிப்படைத் தகைமை இவர்களிடம் குறைவாக உள்ளதையே நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது. இஸ்லாமிய நீதித்துறையில் பொது நலன் என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த அடிப்படை தகைமை இல்லாமல் இருந்தால் அவர்கள் எப்படி சட்டங்கள் பற்றி ஆராய முடியும். ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உரிமையை எப்படி இத்தகையவர்களிடம் வழங்க முடியும்?.
எவ்வாறேனும் இந்த நிலைமைக்கு உலமா சபையை மட்டும் குறை கூறவும் முடியாது. இந்தப் பாரதூரமான நிலைமை ஏற்படுகின்ற வரைக்கும் முஸ்லிம் புத்திஜீவிகள் சமூகம் அதில் மிதவாதிகள் என தம்மை அழைத்துக் கொள்பவர்கள் கூட மிகவும் மௌனமாகவே இருந்துள்ளனர். இஸ்லாத்தை உலமா சபை எவ்வாறு தவறாக பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அவர்களின் பிடிவாதம் அறிவீனம் என்பனவற்றை அறிந்திருந்தும் கூட அதை புத்திஜீவிகள் பொருட்படுத்தவில்லை. உலமா சபையை விமர்சிப்பதில் இருந்து அவர்கள் தவிர்ந்தே வந்துள்ளனர். உலமா சபையின் பொறுப்பற்ற போக்கை புத்திஜீவி சமூகம் கண்டு கொள்ளவில்லை. ஒரு மாற்றுக் குழு பற்றியோ ஏற்பாடுகள் பற்றியோ அவர்கள் யோசிக்கவில்லை.
உண்மையில் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா என்பது உண்மையான உலமா சபை அல்ல உண்மையான புத்திஜீவிகள் கூட்டம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது. இஸ்லாமிய சட்டத்துறை பற்றி அடிப்படை அறிவில்லாத ஒரு கூட்டம் தான் இந்த நாட்டு முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது என்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. மாற்றங்கள் தேவைப்படுகின்றவர்கள் அதற்காக குரல் கொடுக்கும் வரை மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. அறிவீனர்கள் அறிவீனர்களாகவே இருக்கலாம் அதற்கான காரணங்களும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் புத்திஜீவிகள் அவ்வாறு இருக்க வேண்டும் என்றோ அல்லது மௌனம் காக்க வேண்டும் என்றோ தேவையில்லை.
றிஸ்வி முப்தி உலமா சபையின் தலைவராக கடந்த 17 வருடங்களாக பதவியில் உள்ளார். கேள்விக்குரிய சூழ்நிலைகளின் கீழ் தான் இவர் தெரிவு செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்தப் பதவிக்காலப் பகுதியில் உலமா சபை ஒரு தனி மனித காட்சி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து கேள்வி கேட்க அங்கு எவரும் இல்லை.
உலமா சபையை அவர் அரசியலுக்குள் இழுத்துச் சென்றதாகக் கூட குற்றச்சாட்டுக்கள் உள்ளன. வர்த்தகர்களுடன் கொடுக்கல் வாங்கல்கள்தலைமை பதவியை பயன்படுத்தி சொத்துக்களை சம்பாதித்துள்ளமைஏனைய உலமாக்களுக்கு போதிய சுதந்திரம் இன்மைஅடிக்கடி வெளிநாட்டு பயணம்பொது மக்களுக்கு தொடர்பற்ற நிலைமை,கொழும்பில் உள்ள வெளிநாட்டு நிலையங்களுடனான தொடர்புநபி முஹம்மத் (ஸல்) உலக முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற இஸ்லாத்துக்காக அன்றி பெற்றோல் டொலர் இஸ்லாத்துக்காகப் பணியாற்றல் என இன்னும் பல குற்றச்சாட்டக்கள் இவருக்கு எதிராக உள்ளன.
இந்த ஆரோக்கியமற்ற நிலை காரணமாக கௌரவத்துக்குரிய அங்கீகாரம் பெற்ற புத்திஜீவிகளைக் கொண்ட புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையை சிலர் முன்வைக்க வேண்டிய நிலை உருவாயிற்று. உதாரணத்துக்கு பிஸ்தான் பாச்சா என்ற பத்திரிகை எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகின்றார்.
உலமா சபையில் களையெடுப்பு நடத்தப்பட வேண்டும். புரட்சிகர மாற்றங்கள் அங்கு அவசியமாகின்றன. புதிய சூழ்நிலைகளோடு பொருந்திப் போகக் கூடிய மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கக் கூடிய ஒரு பிரிவாக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேநேரம் மூன்றாம் மில்லேனியத்தில் அல்லது அடுத்த நூற்றாண்டில் மார்க்கத் தீர்ப்புக்களை வழங்கக் கூடிய மக்களை சரியாக வழிநடத்தக் கூடிய இஸ்லாமிய புத்திஜீவிகளைக் கொண்ட சமாந்திரமான ஒரு மாற்று அமைப்பை உருவாக்கவேண்டியதன் அவசியம் அதற்கான காலப்பகுதி என்பன பற்றியும் சமூகம் சிந்திக்க வேண்டும். உலமா சபையின் தற்போதைய கடப்பாடுகளை கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டும் என்ற தேவை முஸ்லிம் சமூகத்துக்கு கிடையாது.
முஸ்லிம் சமூகம் இன்று அதன் இருப்பையே கேள்விக்குறியாக்கும் வகையில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பா யூத சக்திகள் இந்திய புலனாய்வு பிரிவு என பல முஸ்லிம் விரோத சக்திகள் அவற்றின் பிரத்தியேகமான நிகழ்ச்சி நிரலுடன் நாட்டில் உள்ளன. முஸ்லிம்களின் ஆதரவோடு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி என்று கூறப்படும் இந்த அரசு இவர்களுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களோடு கைகோர்த்து செயற்படுகின்றன. இந்த சக்திகள் சிங்கள இனவாத சக்திகளை தூண்டி விடுகின்றன. இந்த இனவாத சக்திகள் மீண்டும் தலைதூக்குகின்றன. அரசாங்கமோ அவர்களை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக் கொண்டு இருக்கின்றது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஊழலுக்கு விலைபோனவர்களாக உள்ளனர். சிவில் சமூகம் அமைப்பு முறையில் இருந்து விலகிக் காணப்படுகின்றது. இவ்வாறான சூழலில் பண்டைய சிந்தனைகளோடு தமக்குத் தேவையானவர்களுக்கு சேவகம் புரியும் ஒரு உலமா சபை இருக்க வேண்டும் என்ற தேவையில்லை.
எனவே இன்றைய தேவை வெள்ளிக்கிழமை குத்பா பிரசாரங்களையும் ஏனைய போதனைகளையும் சிறந்த முறையில் மேற்கொண்டு முஸ்லிம் சமூகத்தை சரியான பாதையில் வழி நடத்தக்கூடிய புத்தி ஜீவிகளைக் கொண்ட ஒரு குழுவே ஆகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network