கம்பளை குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கம்பளை பிரதேச குழந்தை கடத்தலை மேற்கொண்டவர் குழந்தையுடன் காணாமல் போன இளைஞரே என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய குறித்த இளைஞர் உட்பட 2 பெண்களை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 பெண்களும் மட்டக்களப்பு - கரடியனாறு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த 2 ஆம் திகதி கம்பளை - கங்வட்டபார பிரதேசத்தில் வைத்து 2 அரை வயது குழந்தை மற்றும் 26 வயதுடைய இளைஞர் ஆகியோர் கடத்தப்பட்டதாக காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடத்தப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரிடம் கடத்தல் காரர்களால் 30 லட்சம் ரூபா கம்பம் கோரப்பட்டிருந்தது. 
இந்தநிலையில், குழந்தையுடன் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞர் கண்டியில் வைத்து கடத்தல் காரர்களால் விடுவிக்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது.
பின்னர் குறித்த குழந்தையும், மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டது.
இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இளைஞரே இந்த கடத்தலுக்கு திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இந்த கடத்தலுடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.