கிழக்கு மாகாண காரியாலய இளைஞர் சேவைகள் மன்றம் அம்பாறைக்கு இடமாற்றம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

கிழக்கு மாகாண காரியாலய இளைஞர் சேவைகள் மன்றம் அம்பாறைக்கு இடமாற்றம்

Share This
 
 
(அஸ்லம் எஸ்.மௌலானா)

கடந்த ஆறு வருட காலமாக சாய்ந்தமருது இளைஞர் வள நிலையத்தில் இயங்கி வந்த ஸ்ரீலங்கா இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயம் அம்பாறைக்கு இடமாற்றப்பட்டிருப்பது தொடர்பில் தென்கிழக்கு முஸ்லிம் பேரவை கவலையும் கண்டனமும் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் எரந்த வெலியங்கே ஆகியோருக்கு இப்பேரவை அவசர மகஜர்களை அனுப்பி வைத்துள்ளது. 

இது குறித்து பேரவையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் தெரிவிக்கையில்;

"அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களின் தொழில்திறன் வழிகாட்டல்களை கருத்தில் கொண்டு கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவின் தூரநோக்கு சிந்தனையினால் அவரது அயராத முயற்சி காரணமாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது வைத்தியசாலைக் கட்டிடக் தொகுதியொன்றை ஐந்து மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்து அனைத்து வசதிகளையும் கொண்ட இளைஞர் வள நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அதேவேளை அக்கட்டிடத் தொகுதியின் மேல் தளத்தில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயமும் அமைக்கப்பட்டது.

இது 2010ஆம் ஆண்டு அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த இளைஞர் வள நிலையத்தில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு துறைகளிலும் பாட நெறிகளைக் கற்று, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று சிறந்து விளங்குகின்றனர். தற்போதும் தொழில்வாண்மைக்கான பல பாடநெறிகள் மிகவும் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய இளைஞர் வள நிலையங்களையும் பாட நெறிகளையும் இளைஞர்களின் கற்றல் செயற்பாடுகளையும் நேரடியாக கண்காணித்து, வழி நடத்தல் மற்றும் அவற்றின் முன்னேற்றங்களுக்கு அரசாங்கத்தின் உதவி, அனுசரணைகளைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை முன்னெடுக்கின்ற இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயம் இங்கு இயங்கி வந்தமை இந்த இளைஞர் வள நிலையத்தின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருந்து வந்துள்ளது.

இக்காரியாலயத்தை கடந்த வருடமும் பல தடவைகள் அம்பாறைக்கு இடமாற்றுவதற்கு திரைமறைவில்  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும் இளைஞர் மற்றும் பொது அமைப்புகளினதும் அரசியல்வாதிகளினதும் பலத்த எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மார்ச் மாதம் 29 தொடக்கம் ஏப்ரல் 04 ஆம் திகதி வரை திருகோணமலையில் நடைபெற்ற 'யொவுன் புர' எனும் இளைஞர் மாநாட்டுக்காக சாய்ந்தமருதில் இயங்கி வந்த இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயத்திற்குரிய கணனிகள் மற்றும் கோவைகள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் இங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் அம்மாநாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

ஆனால் மாநாடு முடிவுற்ற பின்னர் குறித்த கணனிகளும் கோவைகளும் அம்பாறை இளைஞர் வள நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது காரியாலயத்தில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர்களை அம்பாறை இளைஞர் நிலையத்தில் வந்து கடமையாற்றுமாறு இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளரினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனால் தற்போது சாய்ந்தமருத்திலுள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண காரியாலயம் செயலிழந்து மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இது இப்பிராந்திய தமிழ், முஸ்லிம் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதி என்பதுடன் தேசிய நல்லிணக்கத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயற்பாடுமாகும்.

சாய்ந்தமருதில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பயிற்சி நிலையம் கடந்த வருடம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் இது போன்றதொரு இனவாத செயற்பாடே. அடுத்த சில மாதங்களில் சாய்ந்தமருது வள இளைஞர் நிலையம் கூட அம்பாறையின் மற்றொரு சிங்கள பிரதேசத்திற்கு  எடுத்துச் செல்லப்படலாம்.

இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எம்மிடமுள்ள அரசியல் அதிகாரம் பயன்படுத்தப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் இப்பகுதி இளைஞர்கள் விரக்தி நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆகையினால் இவ்விடயத்தில் அரசியல் தலைமைகள் விரைந்து செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்" என்று தென்கிழக்கு முஸ்லிம் பேரவையின் செயலாளர் எஸ்.எம்.கலீல் தெரிவித்தார்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE