May 26, 2017

முஸ்லிம் சமூகத்தின் நெருக்கடி நிலைமைகளை நிதானத்துடன் கையாளுவோம்நமது நாட்டில் சிங்கள, தமிழ் சமூகங்களோடு இணைந்து  அமைதியாக வாழும் முஸ்லிம் மக்களை இனவாத சக்திகள் அச்சுறுத்தி வருவதுடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகமான காணிகளை பலாத்காரமாக பெறுவதற்கும், முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களையும் அழித்து முஸ்லிம் மக்களின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியினை ஏற்படுத்தி அமைதியாக வாழும் முஸ்லிம் மக்களையும், சிங்கள மக்களையும் மோதவிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வட – கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்கள் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்படவேண்டும் என கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்ற ”அறபாவின் அணையாத துருவங்கள்” பாராட்டு விழா நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெடர்ந்தும் தெரிவிக்கையில்…

இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் மூன்றில் ஒரு பங்கினர் மாத்திரமே வட – கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றோம் ஏனைய இரண்டு பங்கினர் ஏனைய மாகாணங்களில் சிங்கள மக்கள் மத்தியிலும் மலையக மக்கள் மத்தியிலும் கலந்து வாழுகின்றனர். கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும் இடையில் இனவாதத்தினை உருவாக்கி நமது நாட்டில் சிங்கள, முஸ்லிம் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற இனவாதிகளினதும், பொதுபலசேனாவும் நமது மத நம்பிக்கையில் கை வைத்து முஸ்லிம் மக்களையும், சிங்கள மக்களையும் உணர்வூட்டி வருகின்ற இக்கால கட்டத்தில் நாம் மிகவும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயல்பட வேண்டியுள்ளது.

கடந்த 1983ம் ஆண்டில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்ற போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அக் கலவரத்தினை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் நமது நாட்டில் 30 வருட கால யுத்தம் நடைபெற்றதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களும், பொருளாதாரமும் அழிக்கப்பட்டு நிம்மதி இழந்தோம்.
ஜனாதிபதியாக வந்த பிரமதாச விடுதலைப்புலிகளுடன் உறவுகளைப் புணி உதவிகளை வழங்கி சமாதானத்தை ஏற்படுத்துவார் என கனவு கண்டனர். 

அவரும் யுத்தத்தின் காரணமாக உயிர் இழந்தார். நமது நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு தருவேன எனக் கூறி தமிழ் பேசும் மக்களின் அமோக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி பதவிக்கு வந்த திருமதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க இனப்பிரச்சினைக்கான தீர்வினை நடைமுறைப்படுத்தாமலே தனது காலத்தினை நிறைவு செய்து விட்டுச் சென்றார்.

ஜனாதிபதியாக பதவி ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கொடூர யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து பாரிய அபிவிருத்தி திட்டங்களை நமது நாட்டில் செயல்படுத்திய போதும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடை பெற்ற இனவாதச் செயற்பாடுகளை கண்டு கொள்ளாமல் இருந்தார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு ஒவ்வொரு காலத்திலும் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளுக்கு அமைதிகாத்து பொறுமையாக செயல்பட்டு இறைவனிடம் துஆப்பிரார்த்தனை மேற்கொண்டுதான் நெருக்கடி நிலையிலிருந்து விடுபட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அல்லது அம்பாறை மாவட்டத்தில் நாம் செறிந்து வாழ்கின்றோம் என்பதனை மட்டும் நினைத்து இனவாதிகளின் உணர்வுகளுக்கு அவசரப்பட்டு தீர்மானங்கள் எடுத்தால் நமது நாட்டில் பல பகுதிகளில் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் மக்களின் அமைதியினை இல்லாமல் செய்து விடும் எனவே மிகவும் நிதானத்துடன் செயல்பட்டு நமது நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம்களின் நிலைமையினையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

மனித வாழ்க்கையில் நாங்கள் எவ்வளவுதான் உயர் பதவிகளில் பணி புரிந்தாலும் தான் வாழும் சமூத்தில் சமூகப்பணி புரிய வேண்டும். இன்று பாராட்டப்பட்ட கல்வியாளர்கள் அனைவரும் பெரும் கல்வியாளர்களாக பணிபுரிந்தவர்களாகும். அர்ப்பணிப்போடு கல்விப் பணி புரிந்தவர்களை நமது சமூகம் எப்போதும் நினைவு கூறிக் கொண்டே இருக்கும். இக்கல்லூரி உயர்ந்த நிலையிலிருந்து வீழ்ந்த போதெல்லாம் இப்பாடசாலையின் சமூகம் இக்கல்லூரியினை எப்படியவாது உயர்ந்த நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்தனர். இவர்களின் தியாக உணர்வால் இக்கல்லூரி இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது.

தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் உள்ளுராட்சி அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்கள் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நமது பிராந்தியத்தின் கல்வித்துறைக்கு பாரிய பங்கினை வழங்கினோம். கோடிக்கனக்கான நிதியில் கட்டி முடிக்கப்பட்ட பல கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடாத்தப்படாமலும்,திறப்பு விழாக்கள் நடாத்தப்படாமலும் நமது பிள்ளைகளின் கல்வித் துறைக்கு பாரம் கொடுத்துள்ளோம்.

பாடசாலைகளில் கல்வி கற்கும் காலத்தினை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி தங்களின் ஆளுமையினை வளர்த்து சமூகத்தில் சிறந்த துறைசார்ந்த தலைவர்களாக திகழ்ந்து பல்லின மக்கள் வாழும் நமது நாட்டில் இன ஒற்றுமைக்கு பங்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post