அமெரிக்காவின் தென் மாநிலத்தை நோக்கி நகரும் சூறாவளி ; மக்கள் அச்சத்தில்
நேற்று முன்தினம் ஆரம்பமான பாரிய சூறாவளி இன்று அமெரிக்காவின் தென் மாநிலத்தை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் மேலும் பாதிப்படையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் சூறாவளி டெக்சஸ், மிஸ்சவுரி, அர்க்கன்சஸ், டென்னீசீ மற்றும் மிசிசிப்பி பிராந்தியங்களின் ஊடாக சென்றுள்ளதனை அடுத்து அங்கு பெருவெள்ளம் மற்றும் பாதிப்புகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.
வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதுடன் பாரிய விருட்சங்கள் வீழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் இந்த அனர்த்தத்தினால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.