மடியில் வைத்துக்கொண்டு வெளியில் தேடி, முஸ்லிம்களை முட்டாள்களாக்க வேண்டாம்!முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இருப்பதை அவதானிக்க முடிகிறது. 

அரசாங்கம் எங்கேயோ பிரபாகரனை கைது செய்வது போல் படை பட்டாளங்களை அனுப்பி ஞானசாரவின் கைது விடயத்தில் நாடகமாடுவது, மடியில் வைத்துக் கொண்டு வெளியில் தேடி அழைவது போலுள்ளது. தங்களுடைய இனவாத கோவிலின் பூசாரியை சம்பிக்க ரணவக்க, விஜயதாச ராஜபக்ஷ போன்ற பலம் வாய்ந்த அமைச்சர்கள் உள்ளே இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்க, ஞானசாரவை கைது செய்யப்போவதாக முஸ்லிம்களை முட்டாள்களாக்கும் இந்த செயல்பாடுகளுக்கு பின்னால் ஆளும் அரசாங்கத்தில் சலுகைகளுக்காக ஒட்டிக்கொண்டிருக்கும் ஆசாத் சாலி போன்றவர்களின் ஆலோசனையே, இந்த கைது நாடகமே தவிர உண்மையில் ஞானசாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு சதவிகிதம் கூட அரசாங்கத்திற்கு இல்லை என்பதில் முஸ்லிம்கள் முதலில் தெளிவுகாண வேண்டும். 

ஞானசார தேரரை கைது செய்வதினால் மாத்திரம் முஸ்லிம் சமூகத்தினுடைய ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. அதன் காரணமாக முஸ்லிம் சமூகம் எந்த ஒரு விடயத்தையும்  சாதித்துவிட போவதில்லை. இப்போது அவரை கைது செய்த மாத்திரத்தில் அவருக்கு தண்டனை வழங்கப்படவும் மாட்டாது என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

பலதடவைகள் ஞானசாரவுக்கு எதிரான வெவ்வேறு குற்றச் சாட்டுக்கள் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையும் அவர் பிணையில் பின்கதவால் வெளியேறிய சம்பவங்களையும் ஏறாலமாக நாம் காண்கிறோம். ஒருவேளை அவர் கைது செய்யப்பட்டாலும் அவ்வாறே அவர் ஓரிரு நாளில் வெளியேரிவிடுவார். அத்தோடு பிரச்சினைகள் அனைத்தும் முற்றுப்பெரும் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்ப்பது நிறைவேறாது.

உண்மையில் ஞானசாரவோடு முஸ்லிம் சமூகம் முரண்பாடு கொண்டுள்ள விடயம் அவருடைய பொதுபலசேனா என்ற அமைப்பும் அதனுடைய விசமமான இனவாத கருத்துக்களுமேயாகும். எனவே முஸ்லிம்கள் முதலில் முன்வைக்க வேண்டியது பொதுபல சேனா எனும் மதவாத அமைப்பை உடனடியாக இலங்கையில் அரசாங்கம் தடைசெய்ய வேண்டும். அல்லாது போனால் தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதியில் ஒன்றான நூறு நாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மத நல்லிணக்க சட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும். இதற்காக முஸ்லிம் சமூகம் தங்களுடைய அரசியல் தலைமைகளுக்கு தவறாது இறுக்கமான அளுத்தம் கொடுக்க வேண்டும்.

அஹமட் புர்க்கான்