போர்வை நகருடனான தொடர்புகள் முற்றாக துண்டிப்பு ; முஸ்லிம்கள் அவதிஎம்.பி.எம். பைரூஸ்

போர்வை நகருடனான தொடர்புகள் முற்றாக துண்டிப்பு; 700 குடும்பங்கள் வீட்டுக் கூரைகளிலும் மலைகளிலும் தஞ்சம்!
நாட்டின் ஒரு பகுதியில் நாம் நோன்பை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் மறுபுறம் மக்கள் இயற்கை அனர்த்தத்தில் சிக்கி பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மழை, வெள்ளம், மண்சரிவினால மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தென் மாகாணத்திலுள்ள போர்வை நகருடனான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு 550 முஸ்லிம் குடும்பங்கள் உள்ளிட்ட 700 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற முடியாதவாறு சிக்கியுள்ளதாகவும் வெலிகமவிலிருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கும் அணியிலுள்ள சகோதரர் அப்ராஸ் குறிப்பிடுகிறார்.
வெள்ளிக் கிழமை காலை முதல் வீட்டுக் கூரைகளிலும் மலைகள் போன்ற உயரமான பகுதிகளிலும் குடிநீரோ உணவோ இன்றி தங்கியிருக்கும் போர்வை பிரதேச மக்களை மீட்கும் பணிகள் இருள் காரணமாக மாலை 6 மணியுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளன. படையினரால் 8 படகுகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் அனைவரையும் உரிய நேரத்தில் மீட்க முடியாமலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போர்வை பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு குடிநீர், உணவுப் பொருட்களைக் கூட கொண்டுபோய்க் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலையில் மீண்டும் முழு வீச்சுடன் மீட்பு, நிவாரண பணிகளை தொடர்வதற்கு அதிக வலு கொண்ட படகுகள் தேவைப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் தலைவர்களும் பொது அமைப்புகளும் உடன் செய்வது நல்லது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு படகுகளையோ உதவிகளையோ அனுப்ப விரும்புவோர் சகோதரர் அப்ராஸை 777347772 தொடர்பு கொள்ளவும்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் அவலங்கள் நீங்கவும் உயிரிழந்துள்ள மற்றும் காணாமல் போயுள்ள நூற்றுக் கணக்கான மக்களுக்காகவும் இந்தப் புனித ரமழானில் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்.