100 சதங்களை எட்டிய சங்கக்காரா: ராயல் லண்டன் கப் போட்டியில் சாதனை

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்


முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்காரா இங்க்லிஷ் கவுன்ட்டி அணியான சர்ரேவுக்காக ஆடி சதமடித்தார். இதன் மூலம், முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அவர் மொத்தம் 100 சதங்களை எட்டி சாதனை படைத்தார்.

இலங்கையின் முன்னணி வீரராகத் திகழ்ந்த சங்கக்காரா, ஓய்வுக்குப் பிறகு இங்கிலாந்தின் முதல் தர போட்டிகளில் சர்ரே அணிக்காக ஆடிவருகிறார். இதில், செவ்வாய்க்கிழமை நடந்த ராயல் லண்டன் கப் போட்டியில் யார்க்‌ஷியர் அணிக்கு எதிராக அவர் 121 ரன்களைக் குவித்தார்.

சர்ரே அணி நிர்ணயித்த 314 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் யார்க்‌ஷியர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

குமார சங்கக்காரா இதுவரை முதல் தர போட்டிகளில் 61 சதங்களை அடித்துள்ளார். லிஸ்ட் ஏ போட்டிகளில் 39 சதங்களை அடித்துள்ளார். இந்த சீஸன் முடிந்ததும் சங்கக்காரா முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது