பாகிஸ்தான் குவாட்டா நகரில் இன்று குண்டுத் தாக்குதல்; 11 பேர் பலி


பாகிஸ்தான் குவாட்டா நகரில் இன்று (23) இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் உத்தியோகபுர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.


பாகிஸ்தானின் குவாட்டா பிரதம பொலிஸ் தலைமை அதிகாரியின் காரியாலயத்துக்கு முன்னால் இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 4 பொலிஸார் பலியாகியுள்ளனர். இன்னும் காயமடைந்தவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமானதாக காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸ் தலைமை அதிகாரியின் காரியாலயத்துக்கு முன்னால் இருந்த கெப் ஒன்றை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். இது தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.