Jun 12, 2017

ஹிஜ்ரி - 2 ரமழான் மாதம் பிறை 17 இல் இடம்பெற்ற பத்ர் போர் பற்றிய சிறிய குறிப்புஷாம் பிரதேசத்திலிருந்து மக்காவை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த அபூ ஸுஃப்யான் தலைமையிலான வியாபாரக் கூட்டத்தை தாக்குவதன் மூலம் மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சேதத்தை உண்டுபண்ணுவதற்கான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு கிடைக்கிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு நபிகளாரின் வலியுறுத்தலற்ற அழைப்பின் பேரில் மதீனாவிலிருந்து 313 வீரர்கள் வெளியேறினார்கள். (82 முஹாஜிர்கள், 231, அன்ஸாரிகள்)  இவர்களிடம் ஒன்று அல்லது இரண்டு குதிரைகளும் 70 ஒட்டகங்களும் இருந்தன.

முஹாஜிரின்களின் படைக்கு அலீ (ரழி) அவர்களும் அன்ஸாரின்களின் படைக்கு ஸஅத் இப்னு முஆத் (ரழி) யும் தலைமை தாங்கினார்கள்.

முஸ்லிம்களுடைய படை தன்னை தாக்க வருகிறது என அறிந்த அபூஸுஃப்யான் மதீனாவாசிகளிடம் உதவி வேண்டி தூது அனுப்பினார்.

தங்களது வியாபாரக் குழுக்களுக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்தை அறிந்த மக்காவாசிகள் முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமென்ற இறுமாப்போடு போருக்காக ஆயத்தமாகி புறப்படுகிறது.

மக்கா காபிர்களுடைய படையில் 1300 வீரர்கள் இருந்தனர். 100 குதிரைகளும் 600 கவச ஆடைகளும் பெருமளவிலான ஒட்டகங்களும் காணப்பட்டது. இந்த படையின் பொதுத் தலைவனாக அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் இருந்தான்.

அபூஸுப்யானுடைய தந்திரமான அறிவை பயன்படுத்தி மக்காவினுடைய வியாபாரக் குழு முஸ்லிம்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டு மதீனாவை அடைகிறது. 

இந்த செய்தி மக்காவினுடைய படைக்கு தெரிய வந்தும் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்ற அவர்களது இறுமாப்பு தொடர்ந்தும் யுத்தமே என்ற முடிவுக்கு வரச்செய்கிறது.

இதன் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டில் மக்கா படையின் ஒரு கோத்திரத்தார் தங்களது 300 வீரர்களோடு யுத்தம் செய்வதை விட்டும் தவிர்ந்து திரும்பிச் சென்றது.

நபிகளாருக்கு வியாபாரக் குழு தப்பிச்சென்றதும் மக்கா படையினர் யுத்தத்திற்குத் தயாராக கிளம்பி வருகின்றனர் என்ற செய்தியும் தெரிய வருகிறது.

உடனடியாக தளபதிகளோடு நபிகளார் யுத்தத்தில் ஈடுபடுதல் தொடர்பாக ஆலோசனை செய்கிறார்கள். இருசாராரும் தங்களது பூரண விருப்பத்தையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்தினர்.

முடிவாக மக்கத்து காபிர்களுக்கெதிராக போர் தொடுத்து முஸ்லிம்களது இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதோடு இந்த இஸ்லாம் மார்க்கத்தின் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இரு தரப்பினரும் நேருக்கு நேர் போரிட்டனர்.
 * மக்கா படையிலிருந்து முஸ்லிம்களுக்கெதிராக கடுமையாக வசைபாடி காபிர்களுக்கு ஊக்கமளித்துக்கொண்டிருந்த அஸ்வத் என்பவனை ஹம்ஸா (ரழி) அவர்கள் வெட்டி சாய்த்தார்கள்.

 * இந்த முதல் இழப்பானது போரின் நெருப்பை கக்கியது முதலில் ஒண்டிக்கு ஒண்டியாக இரு தரப்பாரும் போரிட ஆரம்பித்த போது மக்கத்து காபிர்களின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நன்கு யுத்த தேர்ச்சி பெற்ற உத்பா, ஷைபா, வலீது களத்தில் இறங்கினார்கள். இவர்களை எதிர்க்க முஸ்லிம் படையிலுள்ள மூன்று அன்ஸாரி இளைஞர்கள் முன்வந்த போது அதைத் தவிர்த்து முஸ்லிம்களிலுள்ள முஹாஜிரின்களை காபிர்கள் அழைத்தார்கள்.

  ** உபைதா (ரழி), ஹம்சா (ரழி), அலீ(ரழி) ஆகியோர் முன்வந்து ஒண்டிக்கு ஒண்டியாக போரிட்டு மூவரையும் வெட்டி சாய்த்தார்கள்.

போருக்கான முழு ஆயத்தங்களையும் செய்துவிட்டு, போர் நடந்து கொண்டிருக்கும் போது நபிகளார் அல்லாஹ்விடம் மன்றாடுகிறார்கள். "அல்லாஹ்வே! நீ எனக்களித்த வாக்கை நிறைவேற்றுவாயாக! அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும் ஒப்பந்தத்தையும் உன்னிடம் கேட்கிறேன்"

போர் உக்கிரமடைந்தது. அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் ஒருவனே!! என்ற கோஷத்தோடு ஈமானிய்ய உறுதியை அணிகளனாகக் கொண்டு இறைமறுப்பாளர்களை முஸ்லிம்கள் கடுமையாகத் தாக்கி இழப்புகளை உண்டுபண்ணார்கள்.

மோதல்களும் தாக்குதல்களும் கடுமையாக  உக்கிரமடைந்த போது நபிகளார் மீண்டும் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள். "அல்லாஹ்வே! இக்கூட்த்தை இன்று நீ அழித்துவிட்டால் உன்னை வணங்குவதற்கு இப்பூமியில் யாருமே இருக்க மாட்டார்கள்". என்றவாறு நீண்ட நேரம் பிரார்த்தித்தார்கள்.

நபிகளாரின் பிரார்த்தனைக்கு பதிலளித்த அல்லாஹ் முஸ்லிம்களது படைக்கு உதவியாக வானவர்களை அனுப்பினான்.

இவ்வாறாக நடைபெற்ற பத்ர் யுத்தத்தில் காபிர்கள் பலத்த சேதத்திற்குட்பட்டு படுதோல்வியடைந்தனர். காபிர்களின் தலைவன் அபூஜஹ்ல் உட்பட முக்கிய தலைமைகள் அடங்களாக 70 பேர் கொல்லப்பட்டார்கள். அதுபோல் 70 பேர் சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் தரப்பில் 14 ஸஹாபாக்கள் வீரமரணமடைந்தார்கள்.

ஈமானிய்ய உறுதிகொண்டு அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஓரணியாகப் போராடுகின்றவர்களுக்கு அல்லாஹ்வின் நேரடி உதவியுடனான வெற்றி நிச்சயம் என்பதை இந்த பத்ர் போர் எனும் வரலாற்று நிகழ்வு முழு மனித சமூகத்திற்கும் சான்றுபகர்கிறது.

(அபு அரிய்யா)
Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post